AppamAppam - Tamil

டிசம்பர் 19 – கர்த்தரின் கரம்!

“உமது கரம் என்னோடிருந்து…” (1 நாளா. 4:10).

“ஆண்டவரே, உமது கரம் என்னோடுகூட இருக்கவேண்டும்” என்பது யாபேசின் ஜெபத்தின் ஒரு பகுதியாகும். அந்த ஜெபம் எவ்வளவு இனிமையும், அருமையுமானது என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

“யாபேஸ்” என்றால் துக்கத்தைப் பிறப்பிக்கிறவன் என்று அர்த்தம். ஆம் அவன் துக்கம் நிறைந்தவனாய் இருந்தான். அவன் பிறந்தபோதே அவனுடைய தாய் அவனைத் துக்கத்தோடே பெற்றெடுத்தாள். ஒருவேளை அந்த நேரத்தில் அவளுடைய கணவன் இறந்திருக்கக்கூடும். தொழில் நஷ்டமாக இருந்திருக்கக்கூடும். வறுமையும் வியாதியும் வாட்டி வதக்கி இருந்திருக்கக்கூடும். ஆனால் அவன் அந்த துக்கத்தோடுகூட வாழ்ந்து, கண்ணீரைத் துடைக்கும் கர்த்தருடைய கரத்தை நோக்கிப் பார்த்தான்.

எஸ்றாவின் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். அங்கு திரும்பத் திரும்ப ‘கர்த்தருடைய கரம் என்மேல் நன்மையாயிருந்தது’ என்று அந்த பக்தன் எழுதுகிறதைக் காணலாம். அவர் எழுதுகிறார்: “என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டேன்” (எஸ்றா 7:28). தாவீது சொல்லுகிறார், “நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (சங். 139:9, 10).

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய கரம் எப்போதும் உங்கள்மேல் அமர்ந்திருக்க உங்களை நீங்கள் ஒப்புக்கொடுப்பீர்களா? கர்த்தருடைய கரம் இரட்சிப்பின் கரம் (சங். 144:7). கர்த்தருடைய கரம் பராக்கிரமம் செய்யும் கரம் (சங். 89:13). கர்த்தருடைய கரம் உங்களுக்கு துணை நிற்கும் கரம் (சங். 119:173).

ஒரு வல்லமையான தேவனுடைய ஊழியர் இருந்தார். திடீரென்று அவருக்கு எதிர்பாராதவிதமாக வியாதியும், போராட்டமும் வந்தன. மரண இருள் அவரைச் சூழ்ந்து கொண்டது. மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த அந்த இரவில் திடீரென்று ஒரு தரிசனம் கண்டார். ஒரு பயங்கரமான பள்ளத்தாக்கை அவர் கடக்க வேண்டியதிருந்தது. அந்த பள்ளத்தாக்கிற்குள் பயங்கரமான பிசாசுகள் அலறிக்கொண்டு இருந்தன. அவர் அருகில் வந்தவுடன் ‘வா, வா உள்ளே வா. நீ எனக்குச் சேரவேண்டிய அநேகரைப் பரலோகத்திற்கு கொண்டுபோய்விட்டாய். உன்னைப் பழி வாங்காமல் விடமாட்டேன்’ என்று அலறின.

அந்த பள்ளத்தாக்கையும் அதிலிருந்த கரிய உருவத்தையுடைய பயங்கரமான அசுத்த ஆவிகளையும் கண்டபோது, அந்த பக்தனுடைய உள்ளம் தடுமாறினது. அதே நேரத்தில் ஒரு பெரிய பிரகாசமான ஆணி பாய்ந்த கரம் அந்த இரண்டு பள்ளத்தாக்கின் இரண்டு பக்கங்களுக்கும் பாலமாக வந்து அமர்ந்தது. அந்த கரத்தின்மேல் அந்த பக்தன் ஏறி நடந்து பள்ளத்தாக்கைக் கடந்தார். முடிவில் கர்த்தர் அவரோடுகூட பேசி ‘என் கரம் உன்னோடுகூட எப்போதும் இருக்கும். நீ முன்னேறிச் செல். பின்னிட்டுப் பார்க்காதே’ என்றார். மறுநிமிடம் அந்த தரிசனம் மறைந்தது. அந்த பக்தன் பரிபூரணமான சுகத்தைப் பெற்றுக்கொண்டார். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறதை உணருங்கள்! ஸ்தோத்தரியுங்கள்!

நினைவிற்கு:- “உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்” (சங். 144:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.