No products in the cart.
டிசம்பர் 18 – கர்த்தர் வழிநடத்துபவர்!
“கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்” (உபா. 32:12).
கர்த்தர் உங்களை ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொருநாளும் வழிநடத்துகிறார். உங்களைக் கரம் பிடித்து நீதியின் பாதையிலே வழிநடத்துகிறார். எலியாவை நோக்கிப் பாருங்கள். அவருடைய தனிமையிலே அவருக்கு ஒத்தாசையாக ஒருவரும் இருந்ததில்லை. ஆனால் கர்த்தருடைய சித்தத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, அவரே தன்னை வழிநடத்தும்படியாக தேவ சமுகத்தில் காத்திருந்தார். கர்த்தர் அவரை எத்தனை அருமையாய் வழிநடத்தினார் பாருங்கள்!
பஞ்சகாலத்திலே ஒவ்வொருநாளும் காகங்கள் அவருக்கு அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தன. கேரீத் ஆற்றின் தண்ணீரைக் குடித்தார். அதன் பின்பு கர்த்தர் சாறிபாத் விதவையின் மூலமாக அவரை அற்புதமாய்ப் போஷிக்க சித்தங்கொண்டார். ஒவ்வொருநாளும் அற்புதம் நடந்து கொண்டேயிருந்தது. தேவபிள்ளைகளே, உங்கள் கரங்களை கர்த்தருடைய கரத்தில் பூரணமாய் நீங்கள் ஒப்புக்கொடுக்கும்போது, அவர் உங்களையும்கூட அன்பாய், அருமையாய், மகிமையாய், மேன்மையாய் வழிநடத்துவார்.
கர்த்தர் உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பம் முழுவதையும் வழிநடத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார். குடும்பம் முழுவதற்குமே அவர் போதுமானவர். நோவாவின் குடும்பம் முழுவதையும் பேழைக்குள் அருமையாய்ப் பாதுகாத்து அழிவுக்குத் தப்புவித்தார். கொர்நெலியு குடும்பத்தார் கர்த்தரை விசுவாசித்தபோது, அவர்கள் அத்தனை பேரையும் அபிஷேகித்து, உன்னதங்களுக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நிரப்பினார். உங்களுடைய குடும்பத்தின் பொறுப்புகளை எல்லாம் கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்துப் பாருங்கள். அவர் உங்களை அருமையாய் வழிநடத்துவது நிச்சயம்.
முழு இஸ்ரவேலரையும், ஏறக்குறைய இருபது லட்சம் மக்களையும் அவர் வழிநடத்த வல்லமையுள்ளவராய் இருந்தார். எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்த இஸ்ரவேல் ஜனங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்கு எத்தனை அருமையாய் வழிநடத்திக் கொண்டு வந்தார்! அதிலே ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட யுத்த புருஷர்கள் இருந்தார்கள். பெண்களும், குழந்தைகளும் பெரிய எண்ணிக்கையில் இருந்தார்கள். குறைந்த பட்சம் இருபது லட்சம் பேராவது வனாந்தரத்திலே வழிநடந்திருக்க வேண்டும். அத்தனை பேருக்கும் வனாந்தரத்திலே உணவு கொடுப்பது என்பது சாதாரண ஒரு மனுஷனுக்கு இயலாத காரியமாய் இருந்திருக்கும்.
ஆனால் வழிநடத்துகிறவராகிய வல்ல தேவனுக்கு அது ஒரு பெரிய காரியம் அல்ல. அவருடைய கை குறுகிப்போகவில்லை. அவர் ஒவ்வொருநாளும் அவர்களை மன்னாவினால் போஷித்தார். காடைகளைக் கொண்டுவந்து பாளயத்தில் குவியும்படி செய்தார். இருபது லட்சம்பேரையும் மேகஸ்தம்பத்தின் மூலமாகவும், அக்கினிஸ்தம்பத்தின் மூலமாகவும் ஒருவராகவே அருமையாய் வழிநடத்தினார். தேவபிள்ளைகளே, நம் கர்த்தர் மாறாதவர். இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று சொன்ன அவர் நிச்சயமாகவே உங்களை வழிநடத்துவார்.
நினைவிற்கு:- “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8).
