bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

டிசம்பர் 17 – கர்த்தர் யுத்தம் செய்வார்!

“கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத். 14:14).

இந்த முதல் பகுதியை வாசிக்கும்போது எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷம். ஆனால் அடுத்த பகுதியில், “நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் அநேகருக்கு கடினமான ஒரு காரியமாயிருக்கிறது. தேவ ஜனங்களால் சும்மா இருக்க முடிவதில்லை. தாங்களும் ஏதாவது செய்தே தீர வேண்டுமென்று எண்ணி, ஏதாவது குளறுபடி செய்து, முடிவில் கர்த்தர் தங்களுக்காக யுத்தம் செய்ய முடியாதபடி தடுத்து விடுகிறார்கள்.

அன்று மோசேயால் சும்மா இருக்க முடியவில்லை. தன்னுடைய சுயபெலத்தினால் இஸ்ரவேல் ஜனங்களை மீட்டுவிடலாம் என்று எண்ணினான். தாம் கற்றுக்கொண்ட எகிப்தின் குத்துச்சண்டை, வில்வித்தை, வாள்வித்தை ஆகிய எல்லாவற்றையும் வெளிப்படுத்தவேண்டுமென்று விரும்பினான். வேதம் சொல்லுகிறது, “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்” (அப். 7:22).

மோசே தன்னுடைய சொந்த ஞானத்திலும் பெலத்திலும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்று முயற்சித்து, எகிப்தியன் ஒருவனைக் கொன்றுபோட்டான். பார்வோனுக்கு முன்பாக கொலைகாரனாய்த் தோன்றினான். இதனாலே எகிப்தியரை விட்டும், இஸ்ரவேல் ஜனங்களை விட்டும் அவன் ஓடிப்போய் மீதியானிய தேசத்திலே ஒளிந்துகொள்ள வேண்டியதாயிற்று.

அங்கே கர்த்தர் முட்செடியில் மோசேக்கு தரிசனமானார். அந்த முட்செடி, அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தும்கூட வெந்து போகவில்லை. ஆம், எந்த ஒரு மனுஷன் யுத்தம் தன்னுடையது அல்ல, அது தேவனுடையது என்று எண்ணுகிறானோ, அவனுடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் அக்கினியும் பற்றியெரியும். முட்செடியும் வெந்துபோகாது. இந்த ஆவிக்குரிய பாடத்தை ஆழமாய் அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் கணவனுடைய ஆத்தும இரட்சிப்புக்காக ஊக்கமாக ஜெபிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஜெபித்த பின்பு கர்த்தர் கிரியை செய்யும்படியாக கர்த்தருடைய கரத்தில் அவரை ஒப்புக்கொடுத்து ஸ்தோத்திரம் செலுத்துங்கள். கர்த்தரைச் சார்ந்து, கர்த்தர் இரட்சிப்பார் என்ற முழு விசுவாசத்தோடிருங்கள். கர்த்தர் நிச்சயமாகவே இரட்சிப்பார். சிலர் அப்படிச் செய்யாமல் கணவனை ஓயாமல் இரட்சிக்கப்படுங்கள், இரட்சிக்கப்படுங்கள் என்று சொல்லி நச்சரித்து, அவருடைய இருதயத்தைக் கடினமாக்கி விடுகிறார்கள்.

உங்களுக்கு விரோதமாகப் பொல்லாத மனுஷர் வரும்போது, உங்களால் தாங்கிக்கொள்ள முடியாத வார்த்தையினால் அவர்கள் உங்களைப் புண்படுத்தும்போது, பாரத்தையெல்லாம் கர்த்தர் மேல் வைத்துவிடுங்கள். அவரே உங்களை விசாரிக்கிறவர். உங்கள் கவலைகள் எல்லாவற்றையும் அவர்மேல் வைத்துவிடுங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்யட்டும். நீங்கள் சும்மாயிருங்கள். கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாய் ஜெயத்தைக் கட்டளையிடுவார்.

நினைவிற்கு:- “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக” (சங். 138:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.