No products in the cart.
டிசம்பர் 16 – கர்த்தரே அடைக்கலம்!
“நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்” (சங். 31:2).
ஒவ்வொரு மனிதனுக்கும் அடைக்கலமும், பாதுகாப்பும் தேவை. மனிதன் வீட்டைக் கட்டும்போது முதலாவது அந்த வீட்டில் பாதுகாப்பான வசதிகளைச் செய்கிறான். தான் வாழப்போகும் அந்த வீட்டில் போதுமான பாதுகாப்பு உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுகிறான்.
அப்படியே அரசியல்வாதிகளும், உயர் பதவியில் உள்ளவர்களும் தங்கள் பாதுகாப்புக்கான எல்லா முன் எச்சரிக்கைகளையும் மேற்கொள்ளுகிறார்கள். இந்தியாவில் பாதுகாப்பு கொடுப்பதற்கெனவே ‘கறுப்புப் பூனை’ என்று அழைக்கப்படுகிற ஒரு படையினர் இருக்கிறார்கள். மந்திரிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இன்னும் குண்டு துளைக்காத கார், தற்பாதுகாப்பான ஆடைகள், இன்னும் பல வகையான பாதுகாப்புகளை மேற்கொள்ளுகிறார்கள். ஆனாலும்கூட பகைவர்களிடமிருந்து தங்களைப் பல நேரங்களில் பாதுகாத்துக்கொள்ள முடிவதில்லை.
இந்திய தேசத்தின் பிரதமராயிருந்த இந்திராகாந்தி, தனது பாதுகாப்பு வீரனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இலங்கை தேசத்து ஜனாதிபதி பிரேமதாசா தொழிலாளர் தினத்தன்று அத்தனை பாதுகாப்புகளின் மத்தியிலேயும் குண்டு வெடிப்பிலே பலியானார். பாதுகாப்பில் அதிகமான அளவு முன்னேறி இருக்கிற இஸ்ரவேல் தேசத்தாராலும் தங்கள் ஜனாதிபதியைக் காக்க முடியவில்லை. அமெரிக்க தேசத்தின் ஜனாதிபதியாயிருந்த கென்னடி அத்தனை பாதுகாப்புகளின் மத்தியிலும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய பிரதமராயிருந்த ராஜீவ் காந்தி அவர்கள், பலத்த பாதுகாப்புகள் மத்தியிலும் வெடிகுண்டுக்குப் பலியானார். உலகம் தரக்கூடிய பாதுகாப்பின் வல்லமை இவ்வளவுதான்.
வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா” (சங். 127:1, 2). “இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்” (சங். 121:4-7).
“அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்” (சங். 91:4-6).
தேவபிள்ளைகளே, கர்த்தர்தான் உங்களைக் காக்கிறவர். கர்த்தருடைய அடைக்கலத்தில் இருப்பீர்களானால் நீங்கள் அசைக்கப்படுவதில்லை. எத்தனை புயல் வீசினாலும், எத்தனை தீய மனுஷர்கள் உங்களுக்கு விரோதமாய் எழும்பினாலும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.
நினைவிற்கு:- “என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்” ( சங். 91:14).