AppamAppam - Tamil

டிசம்பர் 12 – கர்த்தருடைய வழியிலே!

“இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” (ஏசா. 48:17).

கர்த்தர் உங்களை வழிநடத்தும்படி, அவருடைய கரத்திலே ஒப்புக்கொடுக்கும்போது, தம் சித்தத்தின்படியே அவர் உங்களை நடத்துவார். செம்மையான வழிகளிலே நடத்துவார். அவர் நடத்துகிறார் என்றால் கூடவே இருக்கிறார் என்றுதான் அர்த்தம். ஆகவேதான் தாவீது ராஜா, “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” (சங். 23:4) என்று சொன்னார்.

இன்று, மனிதன் தன்னைத் தன் சுயபலத்தைக் கொண்டே நடத்திக்கொள்ள முயற்சிக்கிறான். தன்னை நடத்த வேறு ஒருவர் தேவையில்லை. தனக்குத் தேவையான ஞானம், அறிவு, புத்திக்கூர்மை ஆகியவை தன் வசம் இருக்கிறது என்று எண்ணுகிறான். அவனுக்கு செம்மையாக தோன்றுகிற வழிகள் முடிவில் மரண வழிகளாய் மாறுகின்றன. வேறு சிலரைப் பிசாசுகளும், அசுத்த ஆவிகளும், இச்சைகளின் ஆவிகளும், குடிவெறி ஆவிகளும், வேசித்தன ஆவிகளும் தவறான வழியில் நடத்துகின்றன.

யோசேப்பு இளைஞனாய் இருந்தபோது, தேவனுடைய வழிநடத்துதல் பற்றி பல கேள்விகளை எழுப்பியிருக்கக்கூடும். ‘என் சகோதரர்கள் ஏன் என்னை மீதியானியருடைய கையிலே விற்றார்கள், நான் ஏன் எகிப்துக்கு வந்தேன், போத்திபாரின் வீட்டிலே உண்மையுள்ளவனாயிருந்த என்மேல் ஏன் இத்தனை அநியாயமான குற்றச்சாட்டுகள்’ என்றெல்லாம் புலம்பி இருந்திருக்கக்கூடும். ஆனால் ஒரு நாள் கர்த்தர் எல்லாத் தீமையையும் மாறப்பண்ணினபோது, அவரில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறதைப் புரிந்து கொண்டார்.

எகிப்து தேசத்திற்கு பிரதம மந்திரியாய் உயர்த்தப்பட்டபோது, மகா பஞ்சகாலத்தில் தன் குடும்பத்தினரைப் போஷிக்க திராணியுள்ளவராய் விளங்கும்படி கர்த்தரே தன்னை நடத்திச் சென்றதை யோசேப்பு புரிந்து கொண்டார். யோசேப்பை வழி நடத்தினவர், தாவீதை வழிநடத்தினவர், தானியேலை வழிநடத்தினவர் மற்றும் எல்லா பரிசுத்தவான்களையும் வழிநடத்தினவர், நிச்சயமாகவே உங்களையும் வழிநடத்துவார். ஆகவே எங்கே செல்வது, யாரிடம் போவது என்று மனம் கலங்காதிருங்கள்.

என்னுடைய தகப்பனாரின் வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கிறேன். அவர் ஒரு சிறு மளிகைக்கடையில் வேலை செய்தார். பின்னர், ஓராண்டு காலம் ஆசிரியராய் பணியாற்றினார். அதன்பின், வருமான வரித்துறையில் பதினாறு ஆண்டுகள் வேலை செய்யக் கர்த்தர் கிருபை செய்தார். தொடர்ந்து, ஆவியானவர் அவரை வழிநடத்தி, தன் ஊழியத்தின் மேலே நிறுத்தினார். இதுவரை நடத்தினவர் இனியும் நடத்துவார் என்ற பலத்த விசுவாசம் அவருக்குள் இருந்ததினால், கர்த்தர் முடிவு பரியந்தம் அவரை வல்லமையாய் வழிநடத்தினார். தேவபிள்ளைகளே, அவர் வழிநடத்துகிற வல்லமையுள்ள தேவன். அவர் நிச்சயமாகவே உங்களையும் வழி நடத்துவார்.

நினைவிற்கு:- “உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்து கொள்ளக்கடவன்” (ஏசா. 50:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.