AppamAppam - Tamil

டிசம்பர் 08 – கர்த்தருடைய வார்த்தை!

“…அவருடைய (கர்த்தருடைய) வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது” (எரே. 20:9).

எரேமியாவின் தீர்க்கதரிசன அனுபவம் எத்தனை இனிமையானது! கர்த்தருடைய வார்த்தைகளை அவருடைய கண்கள் வாசித்ததுடன், அவரது இருதயம் அதை தியானித்தது. இதனால், அவருடைய எலும்புகளுக்குள்ளே கர்த்தருடைய வார்த்தை அக்கினியாய்ப் பொங்கிக் கொண்டிருந்தது. அவர் வேதத்தை எவ்வளவாய் நேசித்து அன்பு செலுத்தியிருப்பார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

அநேகர் சோதனைகள், பாடுகள், பிரச்சனைகள் மற்றும் பிசாசின் போராட்ட நேரங்களில் மாத்திரமே வேதத்தைத் தேடுகிறார்கள். இந்த நிலைமை முற்றிலும் மாற வேண்டும். வேத வசனங்கள் எப்பொழுதும் உங்கள் வாழ்க்கையை ஆளும்படி ஒப்புக்கொடுத்து ஜீவிப்பீர்களென்றால், நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். வேத வசனங்கள், கலங்கிய உங்கள் உள்ளத்தைத் தெளிவுபடுத்துகிறது. சாத்தானை எதிர்த்து நிற்க தைரியத்தையும், விசுவாசத்தையும் கொடுக்கிறது.

எரேமியா ஏதோ கடமைக்காக வேதத்தை வாசித்து நின்றுவிடவில்லை. அதைத் தன் உள்ளத்திலே நிறுத்தி சிந்திக்கவும், தியானிக்கவும் செய்தார். அந்த வேத வசனங்களை அவர் முற்றிலும் உபயோகப்படுத்தினபடியினால் அது அவருடைய எலும்புகளுக்குள்ளே அக்கினியைப்போல் ஓடிக்கொண்டிருந்தது. ஆம்! வேத வசனங்கள் உங்களுக்குள்ளே அக்கினி ஜுவாலையாகி கொழுந்துவிட்டு எரிகிற வரையிலும் அதை நீங்கள் தியானித்துக்கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் வேத வசனங்களால் நீங்கள் ஆட்கொள்ளப்படவும், வேத வசனங்களால் நடத்தப்படவும், ஜெய ஜீவியத்தின் மூலமாய் முன்னேறிச் செல்லவும் முடியும்.

வேத வசனங்கள் உங்களுடைய உள்ளத்திற்குள் சென்று, ஆழமாய் தரித்திருக்கும்போது உங்கள் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளெல்லாம் வேதவசனங்களாய் இருக்கும். ஜெபிக்கிற ஜெபங்களெல்லாம் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டுகிறதாயிருக்கும். உங்களுடைய ஊழியமெல்லாம் தேவ ஆவியின் பிரசன்னத்தினால் நிரம்பியிருக்கும். ஏனென்றால் கர்த்தருடைய வார்த்தை ஆவியாயும் ஜீவனாயும் இருப்பதாக வேதம் சொல்லுகிறது.

கர்த்தர் எரேமியாவோடுகூட, “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” (எரே. 1:5) என்று பேசினார். இந்த வசனங்களை எரேமியா எவ்வளவு தியானித்திருப்பார்! ஆகவேதான் அவரால் வல்லமையான தீர்க்கதரிசியாய் விளங்க முடிந்தது.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அது உங்களில் அக்கினியாய்ப் பற்றி எரிகிற வரையிலும் அதைத் தியானியுங்கள். அப்பொழுது நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு அவருக்காக அரிய பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.

நினைவிற்கு:- “ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்” (எரே. 5:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.