No products in the cart.
டிசம்பர் 07 – கர்த்தருடைய தோள்கள்!
“கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்” (ஏசா. 9:6).
கர்த்தருடைய பலமிக்க, வல்லமையுள்ள, பெரிய தோள்களை நோக்கிப் பாருங்கள். “கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்” என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தருடைய தோள்களிலே நாம் காண்பது அவரது கர்த்தத்துவம். கர்த்தத்துவம் என்ற வார்த்தைக்கு ஆளுகை, அதிகாரம், பொறுப்பு என பல அர்த்தங்கள் உண்டு. ஆங்கில வேதாகமத்தில் இவ்வார்த்தை “அரசாங்கம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு வகையான அரசாங்கங்களைப் போலல்லாமல் கர்த்தர் வானத்தையும் பூமியையும் அரசாளுகிற பரலோக அரசாங்கத்தைச் சேர்ந்தவராயிருக்கிறார். அது பூமியின் சகல ஆளுகையின் மேலும் அதிகாரம் உடைய அரசாங்கம். அவர் கர்த்தத்துவமானவர்.
ஆனபடியினால்தான் அவரைக் “கடவுள்” என்று அழைக்காமல் “கர்த்தர்” என்று அழைக்கிறோம். சகலமும் கர்த்தருடைய ஆளுகைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவனுடைய தோள்களைப் பாருங்கள். அவருடைய தோள்களிலே பரலோகம் முழுவதும் இருக்கிறது. முழு பூமியும் இருக்கிறது. அண்ட சராசரங்கள் அனைத்தும் இருக்கின்றன.
இஸ்ரவேலை அரசாள முதல் ராஜாவாகிய சவுலைக் கர்த்தர் தெரிந்துகொண்டபோது “எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்” (1 சாமு. 9:2) என்று வேதம் சொல்லுகிறது. ஆனால், கர்த்தர் எப்படிப்பட்டவர்? எல்லா பிரதமர்களும், ஜனாதிபதிகளும், ஆளுநர்களும் அவருடைய தோளின் கீழாய் இருக்கும்படி அவர் அவ்வளவு உயரமும், உன்னதமுமானவர். கர்த்தத்துவம் அவருடைய தோளின் மேல் இருக்கிறது.
ஒரு அரசாங்கத்திற்கு பலவகையான பொறுப்புகள் உண்டு. முதலாவது, தன்னுடைய தேச மக்களைப் பாதுகாக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும். ஜனங்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். மட்டுமல்ல, எதிரிகளாகிய பகைவர்களின் படையெடுப்பிலிருந்து ஜனங்களைப் பாதுகாக்க வேண்டும். ஜனங்கள் தங்களுடைய தேவைகளுக்காகவும், நீதிகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும், அரசாங்கத்தையே நோக்கிப் பார்ப்பார்கள்.
அதுபோல, நீங்கள் கர்த்தருடைய பலமுள்ள தோள்களை நோக்கிப் பார்க்கிறீர்கள். அவருடைய தோள்களின்மேல் உங்களுடைய பாரங்களை இறக்கி வைக்கிறீர்கள். அவருடைய தோள்களின்மேல் சார்ந்துகொள்ளுகிறீர்கள். அவர் உங்களைப் பாதுகாக்கிறார். உங்களுக்கு நீதி செய்கிறார். உங்களை ஆசீர்வதிக்கிறார். எத்தனை சமாதானம்! எத்தனை மகிழ்ச்சி!
உலகப்பிரகாரமான அரசாங்கங்கள் ஒருவேளை வறுமையாலோ பஞ்சத்தாலோ வாடக்கூடும். ஆனால் பரலோக ராஜ்யமோ எந்த பாதிப்புக்கும் ஆளாகாது. அது முற்றிலும் ஆசீர்வாதமானது. தேவபிள்ளைகளே, இயேசுவின் தோளின்மேலிருக்கும் கர்த்தத்துவத்தை நோக்கிப் பாருங்கள். அதை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; …அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை” (ஏசா. 9:6, 7).