No products in the cart.
டிசம்பர் 06 – கர்த்தருடைய விருட்சங்கள்!
“கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்” (சங். 104:16).
“சாரத்தினால் நிறைந்திருக்கும்” என்பது, கர்த்தருடைய பிள்ளைகளின் ஆசீர்வாதங்களைக் குறிக்கும் வார்த்தைகள். மரத்தில் வேர் இருப்பதும், கனியில் ருசி இருப்பதும், இலையில் பசுமை இருப்பதுமே அவற்றின் சிறப்புகள். எனவே சாரத்தினால் நிறைந்திருப்பது என்பது கர்த்தருடைய பிள்ளைகளின் ஆசீர்வாதம்.
இஸ்ரவேல் தேசத்திலே ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் ஒலிவ மரங்கள் உண்டு. அவற்றின் அடிமரத்தைப் பார்த்தால் பழையதாய்க் காட்சியளிக்கும். ஆனால் அவற்றின் கனிகளும், இலைகளும் பசுமையாய் விளங்கும். புதிதாக நாட்டப்பட்டவைபோல செழுமையாகக் காட்சியளிக்கும். அதுபோல, கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள், வசனத்தைக் கேட்டு, ஆவியின் ஆசீர்வாதத்தைப் பெற்று, இலை உதிராத மரத்தைப் போலிருப்பார்கள்.
பரிசுத்த ஆவியாகிய நதி செல்லும் இடங்களிலே வளரும் மரங்கள் எப்படிப்பட்டதாய் இருக்கும்? எசேக்கியேல் தீர்க்கதரிசி சொல்லுகிறார், “நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்… அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள் (எசேக். 47:12). நல்ல மரத்தின் மேன்மை அதன் கனிகளால் விளங்கும். ஒரு மரத்தை அதன் கனிகளால் அறிவீர்கள் என்று இயேசு சொன்னார். நீங்கள் கனி கொடுக்கிறவர்களாய் விளங்க வேண்டும்.
நீங்கள் கொடுக்கும் கனிகள் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும்? அவை ஆவியின் கனியே. கலா. 5:22, 23 ஆகிய வசனங்களில், ஆவியின் கனியானது வரிசைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையிடமும் கர்த்தர் எதிர்பார்க்கிறார். அந்த கனிகள் உங்களிடத்தில் காணப்படுகிறதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
பிலி. 1:10-ல் நீதியின் கனியைக் குறித்தும், கொலோ. 1:10-ல் நற்கிரியைகளாகிய கனியைக் குறித்தும், எபி. 13:15-ல் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியைக் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இலைகளும், கனிகளும் நிரம்பியிருக்கிற ஆசீர்வாதமான வாழ்க்கையை கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிறார். நீங்கள் இம்மையிலும் கர்த்தருக்காகக் கனி கொடுப்பீர்கள். பரலோகத்திலும் அவருக்குக் கனி கொடுப்பீர்கள். பரலோகத்திலுள்ள மரத்தைக் குறித்து வேதம் இவ்வாறு சொல்லுகிறது. “நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்” (வெளி. 22:2).
தேவபிள்ளைகளே, நீங்கள் சாதாரணமான மரம் அல்ல. நீர்க்கால்களின் ஓரமாய் நாட்டப்பட்ட மரம். தன் காலத்தில் தன் கனியைத் தரும் மரம். இலை உதிராத மரம். கர்த்தர் அவ்விதமாய் உங்களை ஆசீர்வதித்திருக்கிறதினாலே கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள்.
நினைவிற்கு:- “விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்” (ஏசா. 65:22).