No products in the cart.
டிசம்பர் 02 – கர்த்தருடையஞானம்!
“…ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன்” (யாத். 31:5).
நம்முடைய தேவன் பட்சபாதம் இல்லாதவர். ஒருவருக்கு ஒன்றை கொடுத்துவிட்டு இன்னொருவருக்கு அதைத்தர மறுக்கிறவர் அல்ல. வேதத்திலுள்ள பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதங்களைக் குறித்து நீங்கள் வாசிக்கும்போதெல்லாம் உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் அவற்றை உரிமை பாராட்டி நீங்கள் கேட்கலாம்.
உங்களுடைய பிள்ளைகள் படிப்பிலே ஒருவேளை பின்தங்கி இருந்திருக்கலாம். கல்வியில் ஆர்வமும், போதுமான ஞாபகசக்தியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லாருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிற கர்த்தரிடத்தில் நீங்கள் ஜெபித்துக் கேட்கும்போது, நிச்சயமாகவே அவர் உங்கள் பிள்ளைகளுக்கு நிறைவான ஞானத்தைத் தந்து ஆசீர்வதிப்பார்.
வேதத்திலே, ஊரியின் குமாரனான பெசலெயேல் என்ற ஒரு வாலிபனைக் குறித்து வாசிக்கிறோம் (யாத். 31:2). கர்த்தர் அவனைத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஞானமும், புத்தியும், அறிவும் உண்டாகும்படி தேவ ஆவியினால் நிரப்பினார். அதன் விளைவாக அவன் விநோதமான வேலைகளை யோசித்துச் சிறப்பாக செய்கிறவனானான். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகிய உலோகங்களில் வேலை செய்வதிலும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப்பதிப்பதிலும் அவன் கை தேர்ந்தவனானான். கர்த்தர் தனக்கு கொடுத்த ஞானத்தை அவன் வீணாக்கவில்லை. அதைக் கர்த்தருடைய பணிக்கே அவன் அர்ப்பணித்தான். ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும், கர்த்தர் தந்த தேவ ஞானத்தின்படியே செய்ய முற்பட்டான்.
நீங்கள் ஜெபித்துக் கேட்கும்போது உங்களுடைய பிள்ளைகளுக்கும் கர்த்தர் அவ்விதமான ஞானத்தைத் தருவார். கணினி ஞானமானாலும் சரி, கணித ஞானமானாலும் சரி, விஞ்ஞான ஞானமானாலும் சரி அல்லது வியாபாரத்துறைக்குத் தேவையான ஞானமானாலும் சரி அதைக் கர்த்தரிடத்திலே கேளுங்கள். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குச் சிறந்த ஈவுகளைக் கொடுக்க சித்தமாயிருக்கிறார். பாபிலோனிலுள்ள எல்லா ஞானிகளைப் பார்க்கிலும் தானியேலுக்குப் பத்து மடங்கு கூடுதலான ஞானத்தைக் கொடுத்ததுபோல, மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும் கர்த்தரைத் தேடுகிற உங்களுடைய பிள்ளைகளுக்கு அவர் பத்து மடங்கு அதிக ஞானத்தைத் தந்தருளுவார்.
பரீட்சை எழுதும்போதோ, புதிய வேலைக்கு செல்லும்போதோ, வேறு தேசங்களுக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போதோ, நீங்கள் பயத்துக்கு கொஞ்சமும் இடம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஞானத்தைத் தருகிற கர்த்தர் கூடவே இருந்து, எல்லாக் காரியங்களும் சிறப்பாக நடக்க கிருபையைத் தந்தருளுவார். தேவபிள்ளைகளே, கர்த்தர் தருகிற ஞானம் சாதாரணமானதல்ல, தெய்வீகமானது.
நினைவிற்கு:- “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்” (ஏசாயா 11:2).