No products in the cart.
நவம்பர் 28 – மூன்று கூடாரங்கள்!
“ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால் இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்” (மத்.17:4).
மறுரூபமலையிலே, தேவ பிரசன்னத்தின் மகிழ்ச்சி பேதுருவை நிறைத்தது. அவர் உணர்ச்சிவசப்பட்டவராய், உற்சாகமுடையவராய் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது” என்று சொல்லுகிறார். எத்தனை உண்மை!
நீங்கள் அனுதின வாழ்க்கையின் பிரச்சனைகளில் அலசடிப்பட்டுக்கொண்டு இருக்கிறதைப் பார்க்கிலும், அமைதியான மறுரூப மலையில் இனிமையான தேவ பிரசன்னத்தில் மகிழ்வது எத்தனை நல்லது! அந்த அனுபவம், ஊழியத்தை வல்லமையாய் செய்வதற்குத் தேவையான தேவ பலத்தை உங்களுக்குள் கொண்டுவருகிறது. கர்த்தருக்காக வைராக்கியமாக நிற்கும் சத்துவத்தையும், பெலனையும் உங்களுக்குள் நிரப்பிவிடுகிறது.
பேதுரு எப்பொழுதுமே துடிப்புள்ளவர். துரிதமாகச் செயலாற்ற வேண்டும் என்று விரும்புகிறவர். தேவ அன்பினால் நிறைந்தவர். மோசேயையும், எலியாவையும் கண்டதும் அவருடைய உற்சாகம் இன்னும் பல மடங்கு அதிகமாகிவிட்டது. “தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்” (மாற்கு 9:6) என்று வேதம் சொல்லுகிறது.
தேவபிள்ளைகளே, மோசேயும், எலியாவும் நம்மை விட்டுப் போய்விடக்கூடாது. அவர்களும் நம்மோடு தங்கியிருக்கவேண்டும். பரிசுத்தவான்களை பார்ப்பதும் அவர்களோடு சம்பாஷிப்பதும் அதிக சந்தோஷத்தைத் தரக்கூடிய காரியங்கள்.
ஒருவேளை பேதுருவினுடைய உள்ளத்திலே, மோசேயும் எலியாவும் இயேசுவோடு இணைந்துவிட்டால் உலகத்தையே கலக்கிவிடலாம் என்ற எண்ணம் வந்திருக்கக்கூடும். ரோம ராணுவத்தின் பிடியிலிருந்து இஸ்ரவேல் மக்களை விடுதலையாக்கிவிட முடியும். உலகத்தில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து விடலாம் என்று கற்பனைப் பண்ணியிருந்திருக்கக்கூடும்.
ஆனாலும், பேதுரு ஒரு காரியத்தை முன்வைத்தே கர்த்தரிடத்தில் கேட்டார். “ஆண்டவரே உமக்குச் சித்தமானால்” என்று ஆரம்பிக்கிறதைப் பாருங்கள். தேவனுடைய சித்தத்தின்படியே ஆகவேண்டும் என்பதே பேதுருவின் விருப்பம். நீங்கள் உங்களுடைய விருப்பங்களை எல்லாம் கர்த்தருக்கு தெரியப்படுத்தும்போதுகூட ‘உம்முடைய சித்தமே நிறைவேறட்டும்’ என்று சொல்லி ஜெபிக்க வேண்டியது அவசியம். யாக்கோபு தன்னுடைய நிரூபத்தில் எழுதுகிறார்: “ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்ல வேண்டும்” (யாக். 4:15).
இயேசுகிறிஸ்துவும் கெத்செமனே தோட்டத்திலே ஜெபிக்கும்போது “பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும். ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்” (மத். 26:39). தேவபிள்ளைகளே, நீங்களும்கூட தேவ சித்தம் நிறைவேற ஜெபிப்பீர்களா?
நினைவிற்கு:- “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்” (சங். 15:1).