No products in the cart.
நவம்பர் 22 – மூன்று முத்திரைகள்!
“வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்” (எபே. 1:13).
பரிசுத்த ஆவியினால் கர்த்தர் உங்களை முத்திரை போட்டிருக்கிறார். உங்களுடைய ஆவியோடுகூட தேவ ஆவியானவர் இணைந்து, நீங்கள் கர்த்தருடையவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். தேவனுடைய முத்திரை உங்கள்மேல் இருக்கிறது. ஆகவே மீட்கப்படும் நாளிலே நீங்கள் கலங்க வேண்டியதில்லை.
பழைய ஏற்பாட்டிலே ஆபிரகாமுக்கு கர்த்தர் விருத்தசேதன முத்திரையை அடையாளமாய்க் கொடுத்தார். சகல ஆண் பிள்ளைகளும் கர்த்தருக்காக வேறு பிரிக்கப்பட்டு விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். யார்யார் எல்லாம் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்களோ, அவர்கள் புறஜாதியாரிலிருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டார்கள். தாங்கள் கர்த்தருடையவர்கள் என்பதை நிலைநாட்டினார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்கும், வாக்குத்தத்தங்களுக்கும் சுதந்தரவாளியானார்கள்.
விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களுக்கெல்லாம் ஆபிரகாம் முற்பிதாவானார். இஸ்ரவேலர் அனைவரும் ஆபிரகாமுக்குள் விருத்தசேதனத்தின் முத்திரையின் வழியாக கர்த்தருக்கென்று வேறு பிரிக்கப்பட்டார்கள். பூமியிலே பரிசுத்த ஜனங்களாகவும், மீட்கப்பட்டவர்களாகவும் அவர்கள் விளங்கினார்கள்.
இந்த விருத்தசேதனத்தின் முத்திரையானது சிலுவையின் அடிவாரம் வரையிலும் வந்தது. பிறகு சரீர விருத்தசேதனம் அல்ல, உள்ளான மனுஷனிலுள்ள ஆவிக்குரிய விருத்தசேதனத்தையே பின்பற்றும்படி கர்த்தர் விசுவாசிகளுக்குப் போதித்தார். விருத்தசேதனம் இல்லாதவர்களையும்கூட, விசுவாசத்தின் மூலமாய் தேவன் நீதிமான்களாக்குகிறார்.
புதிய ஏற்பாட்டில் விருத்தசேதனத்தின் முத்திரை வலியுறுத்தப்படவில்லை. அப். பவுல் எழுதுகிறார்: “விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்” (1 கொரி. 7:19).
புதிய ஏற்பாட்டில் கர்த்தர் உங்களுக்குப் புதிய முத்திரையைக் கொடுத்திருக்கிறார். அதுதான் பரிசுத்த ஆவியாகிய முத்திரை. இந்த முத்திரை இருக்கிறவனை மரண தூதனோ, பாதாள தூதனோ சேதப்படுத்துவதில்லை.
இன்னொரு முத்திரை, அது உபத்திரவ காலத்தில் சாத்தான் கொடுக்கிற “அந்திக்கிறிஸ்துவின் முத்திரை” (வெளி. 13:17,18). அதினுடைய இலக்கம் 666 என்பதாகும். அந்த 666 என்ற எண்ணிலே, ஒரு ஆறு வலுசர்ப்பத்திற்கும், இன்னொரு ஆறு மிருகத்திற்கும், மூன்றாவது ஆறு கள்ள தீர்க்கதரிசிக்கும் ஒப்புமையாக இருக்கிறது.
இந்த மூன்று ஆறும் ஒன்று சேர்ந்துதான் அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சியை உலகத்திற்குக் கொண்டு வருகிறது. தேவபிள்ளைகளே, மிருகத்தின் முத்திரைக்குத் தப்பும்படி இப்பொழுதே பரிசுத்த ஜீவியத்திற்கு ஒப்புக்கொடுங்கள். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுங்கள். கர்த்தர் வரும் வேளை சமீபமாகிவிட்டது.
நினைவிற்கு:- “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் ” (எபே. 4:30).
