AppamAppam - Tamil

நவம்பர் 20 – முழங்கால் அனுபவம்!

“பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது” (எசே. 47:4).

உங்கள் ஜெப வாழ்க்கையில், நீங்கள் கணுக்கால் அனுபவத்தோடு நின்றுவிடக் கூடாது. அடுத்த அனுபவமாகிய முழங்கால் அனுபவத்திற்குள் கடந்து வரவேண்டும். முழங்கால் அனுபவம் என்றால் என்ன? அதுதான் ஆழமான ஜெப ஜீவியத்தின் அடையாளம்.

கணுக்கால் அனுபவத்திலே பெற்ற இரட்சிப்பின் சந்தோஷத்திலும், ஆவியானவரின் நிறைவிலும் மகிழ்ந்துகொண்டிருந்த தன் பிள்ளைகளைக் கர்த்தர் மிகுந்த அன்போடு முழங்கால் அனுபவத்திற்குள் கொண்டு வருகிறார். வெறுமையாய் சந்தோஷப்பட்டு, களிகூர்ந்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. மன்றாடி ஜெபிக்க வேண்டிய அனுபவத்திற்குள் நீங்கள் கண்டிப்பாகக் கடந்து வர வேண்டும்.

கர்த்தர் முழங்காலிலே நின்று ஜெபிக்கக்கூடிய ஜெபவீரர்களைக் காண ஏங்குகிறார். என் பிள்ளைகள் என்னோடுகூட முழங்காற்படியிட மாட்டார்களா என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு முழங்கால் வீரர். அவர் மிகவும் வியாகுலத்தோடும், அதிக ஊக்கத்தோடும் ஜெபம் பண்ணினார். அவருடைய வியர்வை இரத்தத்தின் பெரும் துளிகளாய் தரையிலே விழுந்தது (லூக்கா 22:44) என்று வேதம் சொல்லுகிறது.

அந்த அருமையான ஆண்டவர், நம்மை நோக்கி ‘ஒருமணி நேரமாவது நீங்கள் என்னோடு விழித்திருந்து ஜெபிக்கக் கூடாதா? ஒரு மணி நேரமாவது முழங்காலில் நிற்கக்கூடாதா?’ என்று ஏக்கத்தோடு கேட்கிறார். கணுக்காலில் நின்று கொண்டிருக்கிற நீங்கள், முழங்காலில் நின்று மன்றாடுகிற மன்றாட்டின் ஊழியத்திற்கு நேராய்க் கடந்து வாருங்கள்.

வேதத்தில் உள்ள பரிசுத்தவான்களெல்லாம் முழங்கால் வீரர்களாய் இருந்தார்கள். பாபிலோன் தேசத்திலே ஜெபிப்பதைத் தடை செய்யும் சட்டதிட்டங்கள் வந்தபோதிலும் தானியேல் தினமும் மூன்று வேளையும் எருசலேமுக்கு நேராய்த் தன் பலகணிகளைத் திறந்து முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணினார். சிங்கக் கெபியிலே போட்டாலும் போடட்டும். நான் முழங்காலில் நிற்பேன் என்று தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தார். ஆகவேதான், கர்த்தர் அவருக்காக யுத்தம் செய்து சிங்கங்களின் வாயைக் கட்டிப் போட்டார்.

அதுபோலவே ஸ்தேவானும் ஒரு முழங்கால் வீரனாய் இருந்தார். அவருடைய பகைவர்கள் அவர்மேல் கல்லெறியும்படி கற்களை எடுத்தபோது, ஸ்தேவான் உடனே முழங்கால்படியிட்டார். வானத்துக்கு நேராகக் கண்களை ஏறெடுத்து மகிமையான பரலோகத் தரிசனத்தைக் கண்டார். அங்கே பிதாவினுடைய வலதுபாரிசத்திலே இயேசுகிறிஸ்து நின்று கொண்டிருக்கிறதைக் கண்டுப் பரவசம் அடைந்தார்.

தேவபிள்ளைகளே, இன்றைக்கு நம்முடைய தேசத்தில் ஜெபிக்க முடியாதபடி கொடூரமான சட்ட திட்டங்கள் ஏதும் இல்லை. சிங்கக்கெபியின் பயமோ, கல்லெறிவாரோ இல்லை. கிருபையின் வாசல்களைக் கர்த்தர் திறந்து வைத்திருக்கிறார். ஆவியோடும், உண்மையோடும் ஜெபிக்கும் அபிஷேகத்தைப் பொழிந்தருளுகிறார்.

நினைவிற்கு:- “நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்” (சங். 95:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.