No products in the cart.
நவம்பர் 18 – முதிர்வயது!
“உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச்… செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன்; நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசாயா 46:4).
உலகத்தாருக்கு ஒருவேளை முதிர்வயது வேண்டாத பருவமாய்க் காணப்படலாம். ‘ஐயோ! பிள்ளைகளுக்கு பாரமாய் இருக்கவேண்டியதிருக்குமோ? வியாதி, நோய் வந்துவிட்டால் என்ன செய்வது? பெலன் எல்லாம் ஒடுங்கித் தள்ளாட வேண்டியதாய் இருக்குமோ’ என்றெல்லாம் பலர் கலங்கக்கூடும். ஆனால், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு முதிர்வயது ஒரு பலவீனம் அல்ல, அது பெலன். அது சாபம் அல்ல, ஒரு ஆசீர்வாதம்!
உலகப்பிரகாரமான தலைவர்களில் சிலரைப் பாருங்கள். தமிழ்நாட்டிலே அரசியல்வாதியாக மூதறிஞர் ராஜாஜியும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதுகாவலராக ஈ.வெ.ரா. பெரியாரும் இருந்தனர். இவர்கள் இருவரும் தொண்ணூறு வயதைத் தாண்டிவிட்ட போதிலும், தங்களுடைய கொள்கைக்காக அன்றாடம் மேடையிலே ஏறினார்கள். மக்களைச் சந்தித்தார்கள். தங்கள் தத்துவங்களைப் பரப்பினார்கள்.
அவர்கள் கடைசிவரை ஓய்ந்திருக்கவோ, சோம்பலாய் இருக்கவோ விரும்பவேயில்லை. அவர்களுக்கு வயது ஒரு தடைக்கல்லாய் இருந்ததில்லை. அவர்கள் முன்னேறுவதற்கு அவர்களது வயது ஒரு ஏணிப்படியாகவே இருந்தது.
வயது முதிர்ந்தவர்களிடம் விலையேறப்பெற்ற ஒரு பொக்கிஷம் உண்டு. அதுதான் அவர்களது அனுபவம்! பரிசுத்தவான்களிடத்தில் காணப்படுகிற அனுபவம் எத்தனை இனிமையும், அருமையுமானது! வேதத்திலே வயதினால் பெலன் குன்றாத மூன்று பேரைக் குறித்து வாசிக்கலாம். முதலாவது மோசே, இரண்டாவது காலேப், மூன்றாவது அன்னாள்.
மோசேயைக் குறித்து, “மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை” (உபா. 34:7) என்று வேதம் சொல்லுகிறது.
அன்று காலேப் சொன்னார்: “இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:10,11).
அன்னாளைக் குறித்து, “ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்” (லூக்கா 2:37) என்று வேதம் சொல்லுகிறது.
தேவபிள்ளைகளே, உங்களுக்கு வயதாகிக்கொண்டு போகிறதே என்று ஒருநாளும் கவலைப்படாதீர்கள். “கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது” (சங். 103:5) என்றும், “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்” (ஏசாயா 40:31) என்றும் வேதம் சொல்லுகிறது.
நினைவிற்கு:- “இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக” (சங். 71:18).