No products in the cart.
நவம்பர் 15 – முக்காட்டின் நடுவே!
“உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது” (உன். 4:1).
கர்த்தர் பாராட்டுகிற கண்கள் எப்படிப்பட்டது? அது முக்காட்டின் நடுவே காணப்படும் புறாக்களின் கண்களாய் இருக்கிறது. முக்காடு என்பது கர்த்தருக்குச் செலுத்தப்படும் கனமாகவும், ஜெபத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. பயபக்தியுள்ள பெண்கள் முக்காடிட்டு ஜெபத்திற்காகக் கடந்து வருகிறார்கள்.
கர்த்தர், மன்றாடி ஜெபிக்கும் ஜெபவீரர்களையும், கண்ணீரின் ஆவியோடு கதறும் ஜெபவீரர்களையும், ஆத்துமாக்களுக்காக பாரப்பட்டுத் திறப்பிலே நின்று இருதயத்தை ஊற்றி ஜெபிக்கும் ஜெபவீரர்களையும் காணும்போது, உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாய் இருக்கிறது என்று சொல்லிப் பாராட்டுகிறார் (உன். 4:1). இன்று கர்த்தருக்குத் தேவை, தேவ சமுகத்தில் உத்தரவாதத்தோடு பரிந்து பேசி திறப்பிலே நின்று ஜெபிக்கிற ஜெபவீரர்களே.
முதல் முதலாக ஆதி. 18-ம் அதிகாரத்தில், ஆபிரகாம் இந்த ஜெப ஊழியத்தை ஆரம்பித்து வைத்தார். சோதோம் கொமோராவுக்காக அவர் எவ்வளவு பரிந்து பேசினார், விண்ணப்பித்தார், வேண்டுதல் செய்தார் என்பதை இந்த அதிகாரத்தின் மூலம் அறியலாம். ஆபிரகாமின் அந்த ஜெபம் ஆத்தும பாரம் மிகுந்ததாகவும், கருணை உள்ளதாகவும், அன்புள்ளதாகவும் விளங்கியது.
அதுபோலவே, மோசேயின் கண்களும்கூட கண்ணீர் நிறைந்த புறாக்களின் கண்கள்தான். ‘ஒரு இமைப்பொழுதில் முறுமுறுத்த இஸ்ரவேலரை அழிப்பேன்’ என்று கர்த்தர் சொன்னபோது, மோசே திறப்பிலே நின்று இஸ்ரவேல் ஜனங்களுக்காகக் கண்ணீருடன் மன்றாடி அவர்களுடைய அழிவைத் தடுத்து நிறுத்தினார். எஸ்தரைப் பாருங்கள்! புசியாமலும் குடியாமலும் மூன்று நாட்கள் கண்ணீருடன் ஜெபித்து யூத குலத்தையே அழிவிலிருந்து தப்புவித்தாள். இப்படி உத்தரவாதமாக கண்ணீருடன் ஜெபிக்கும் கண்களைத்தான் கர்த்தர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.
ஒருவேளை உங்கள் வாழ்க்கையிலே தனிப்பட்ட பிரச்சனைகள், சத்துருவின் போராட்டங்கள், குடும்ப சமாதானக் குறைவுகள் காணப்படலாம். அப்போது நீங்கள் எரேமியா 29:13-ல் சொல்லியிருக்கிறபடி முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடி கண்ணீரோடு ஜெபம் பண்ணுங்கள். பாதி ராத்திரியில்கூட எழுந்து ஜெபிக்கிற ஜெப அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் (சங். 119:62). கர்த்தர் உங்கள் கண்ணீரின் ஜெபத்திற்கு பதிலளிக்காமல் கடந்து செல்லவேமாட்டார்.
இயேசுவின் கண்கள் எப்படிப்பட்டது? அது தண்ணீர் நிறைந்த நதி ஓரமாய் தங்குகிற புறாக்கண்களாகவே இருக்கிறது. இயேசு லாசருவின் மரணத்தில் கண்ணீர் விட்டார் (யோவான் 11:35). எருசலேமைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் (லூக். 19:41). கெத்செமனேயில் முழு உலகத்திற்காகவும் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையில் விழும் வகையில் ஜெபித்தார் (லூக். 22:44).
தேவபிள்ளைகளே, தேவ சமுகத்தில் உங்கள் முழங்கால்களை முடக்குங்கள். கண்ணீரோடு ஜெபிக்க ஆரம்பியுங்கள்.
நினைவிற்கு:- “நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்” (சகரி. 12:10).