No products in the cart.
நவம்பர் 14 – மிதிப்பாய்!
“இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது” (லூக். 10:19).
வேதத்திலே, கர்த்தர் கொடுத்திருக்கிற மிக வல்லமையான வாக்குத்தத்தங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வாக்குத்தத்தத்தில் கர்த்தர் உங்களுக்கு அதிகாரத்தையும், வல்லமையையும் கொடுத்திருக்கிறார். அடைக்கலத்தையும், பாதுகாப்பையும் கொடுத்திருக்கிறார். “ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது” என்று தைரியப்படுத்தவும் செய்கிறார்.
உங்களுக்கு விரோதமாக உலகமும், மாம்சீக இச்சைகளும், வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளுடைய சேனைகளும் கிரியை செய்கின்றன. விழுந்த தேவதூதனும், தான் ஆராதனையை பெறும்படியாக ஜனங்களைப் பயமுறுத்தி கலங்கப்பண்ணுகிறான். பிசாசானவன் யாரை விழுங்கலாமோவென்று கெர்ச்சிக்கிற சிங்கம்போல வகைதேடிக் கொண்டிருக்கிறான்.
இவை எல்லாவற்றின் மத்தியிலும் கர்த்தர் உங்களுடைய பக்கத்தில் நின்று, அதிகாரத்தையும் வல்லமையையும் கொடுத்து, சாத்தானை உங்களுடைய பாதபடிக்கு கீழாக்குவேன் என்று வாக்களிக்கிறார். மேலே சொன்ன வாக்குத்தத்தத்தில் “மிதிப்பாய்” என்று தேவன் சொல்லக் காரணம் என்ன? கிறிஸ்து தாமே சிலுவையிலே சத்துருவினுடைய தலையை மிதித்து நசுக்கியதே இதற்கு காரணம். மேசியா அவ்விதமாக மிதிப்பார் என்பது ஆதியாகமத்திலே தேவன் கொடுத்த வாக்குத்தத்தமாக இருக்கிறது. தேவன் வலுசர்ப்பத்தைப் பார்த்து “அவர் உன் தலையை நசுக்குவார்” (ஆதி. 3:15) என்று சொன்னார். கிறிஸ்து சத்துருவினுடைய தலையை நசுக்கினதுபோலவே நீங்களும் அவனை நசுக்கி மிதித்து மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்.
ஒரு பூனையானது எலியைப் பிடித்து, அதைக் குற்றுயிராக்கி குட்டிகளிடத்தில் கொண்டுவந்து போடும். அந்த குட்டிகள் அரை உயிராய் இருக்கிற எலியைக் கடித்து கடித்து சிதைக்கும். குட்டிகளுக்கு ஒரே கொண்டாட்டமாய் இருக்கும். ஏற்கனவே எலியானது அரை உயிராய் இருப்பதால் குட்டிகள் பயப்பட வேண்டியிருக்காது. அதைப்போலவே இயேசு சாத்தானை சிலுவையிலே நசுக்கி அவன் வல்லமையை அழித்து உங்களிடத்தில் கொடுத்திருக்கிறார். அதோடு உங்களுக்கு அவன்மேல் அதிகாரத்தையும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார்.
கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? “சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய்” (சங். 91:13). அநேகர் சாத்தானை தங்கள் தலையின்மேல் தூக்கிச் சுமந்துகொண்டிருப்பதால் எப்பொழுதும் தங்கள் கவலைகளையும், தோல்விகளையும், பிரச்சனைகளையுமே பேசிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
தேவபிள்ளைகளே, இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு, வேத வசனத்தினால் கழுவப்பட்ட உங்களுக்கு ஆவியிலே ஒரு தைரியமும் பெலனும் உண்டாக வேண்டும். நீங்கள் ஆத்துமாவிலும், ஆவியிலும், சாத்தானை மிதித்து, ஜெயத்தை முழங்குவீர்களாக.
நினைவிற்கு:- “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்” (ரோமர் 16:20).