No products in the cart.
நவம்பர் 13 – மிகவும் எளியது
“இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்” (நியா. 6:15).
கர்த்தர் சிறியோரைப் பெரியோராக உயர்த்துகிறார். தாழ்மையுள்ளவர்களுக்குக் கர்த்தர் அளவில்லாமல் கிருபையளிக்கிறார். சிறு மந்தையைப் பார்த்து, ‘சிறு மந்தையே பயப்படாதே’ என்று சொல்லித் தேற்றுகிறார்.
உங்களுடைய குடும்பத்தில் நீங்கள் சிறியவராகவும், அற்பமாகவும் காணப்படலாம். மற்றவர்கள் உங்களைத் தாழ்வாக எண்ணலாம். ஆனால் கர்த்தரோ உங்களை மேன்மையாக எண்ணுகிறார். வேதம் சொல்லுகிறது, “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்” (1 சாமு. 2:8).
அன்று கிதியோன் தன்னைத் தாழ்த்தி மனாசேயில் தன் குடும்பம் எளியது என்றும், தன் தகப்பன் வீட்டிலே தான் சிறியவன் என்றும் சொன்னபோது, கர்த்தர் கொடுத்த பதில் என்ன தெரியுமா? “நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்” (நியாயா. 6:16). மட்டுமல்ல, அந்தச் சிறியோனை கர்த்தர் முதல் முறை அழைத்தபோதே ‘பராக்கிரமசாலியே’ என்று அழைத்தார். ‘பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடுகூட இருக்கிறார்’ என்று சொல்லி உற்சாகப்படுத்தினார்.
தாவீது எல்லாருடைய பார்வையிலும் சிறியவனாகவும், எளியவனாகவும் காணப்பட்டார். அவனுடைய தகப்பன் அவருக்குக் கொடுத்த வேலை ஆடுகளை மேய்க்கின்ற சாதாரண வேலைதான். ஆனால் அற்பமாய் எண்ணப்பட்ட தாவீதோடுகூட கர்த்தர் இருந்தார். கர்த்தர் அவரை ஆசீர்வதித்து, மிகவும் உயர்த்தி, இஸ்ரவேலின் மேல் இராஜாவாக அபிஷேகம் பண்ணினார். மட்டுமல்ல, உனக்கு ஒரு நிலையான வீட்டைக் கட்டுவேன் என்று உடன்படிக்கையும் செய்தார்.
அதற்கு தாவீது, “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?” (2 சாமு. 7:18) என்று தன்னைத் தாழ்த்தினார். நீங்கள் பல பாடுகளின் வழியாக கடந்துசெல்ல வேண்டியதாயிருக்கும்போது கர்த்தரை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அவர் உங்களோடுகூட இருக்கிறார்.
இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள் பெத்லகேம் சிறிய ஊராய் இருந்தும், கர்த்தர் அதைத் தம்முடைய பிறப்பிடமாய்த் தெரிந்துகொண்டார். வேதம் சொல்லுகிறது, “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது” (மீகா 5:2).
தேவபிள்ளைகளே, நீங்களே அந்த பெத்லகேம். நீங்கள்தான் கிறிஸ்துவை புறப்படப்பண்ணுகிற சிறிய பெத்லகேம். கிறிஸ்து மற்றவர்களுடைய உள்ளத்தில் பிறக்கும்படி, நீங்கள் கர்ப்ப வேதனையோடு ஜெபிக்கும்படி கர்த்தர் உங்களை அழைக்கிறார். ஜெபிப்பீர்களா?
நினைவிற்கு:- “உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான்” (லூக்கா 9:48).