No products in the cart.
நவம்பர் 12 – மாம்சத்தில் இருந்த நாட்களில்
“பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (எபி. 2:14).
நாம் மாம்சமாயிருக்கிறோம். ஆனால் கர்த்தரோ ஆவியாய் இருக்கிறார். நமக்கு சரீரம் உண்டு. ஆனால் ஆவியானவருக்கோ சரீரம் இல்லை. ஆவியாய் இருக்கிற தேவன் நம்மைப்போல மாம்சமும் இரத்தமுமுடையவராய் மாற சித்தமானார். இயேசு என்ற பெயரில் அவர் மாம்சமானார்.
ஒரு கதை உண்டு. ஒரு சிறுவன் எறும்பு ஒன்று ஆபத்தில் இருப்பதைக் கண்டு, அதைத் தடுத்து நிறுத்த அதன் முன்பாக தன் கைகளை வைத்தான். ஆனால் அது சென்று கொண்டேயிருந்தது. எறும்பே உனக்கு ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்று சத்தமிட்டு சொல்லிப் பார்த்தான். ஆனால் அந்த எறும்புக்கோ அதைப் புரிந்துக்கொள்ளும் சக்தி இல்லை. எப்படித்தான் அந்த எறும்பை ஆபத்திலிருந்து அவன் தப்புவிக்க முடியும்? அவனும் எறும்பைப்போல மாறி அந்த எறும்புக்கு ஆபத்தைப் புரிய வைப்பதே அவன் முன்னிருந்த ஒரே வழி. இயேசு அதைத்தான் செய்தார்.
மனுக்குலம் பாதாளத்தை நோக்கியும், நரகக் கடலை நோக்கியும் தீவிரித்துக் கொண்டிருக்கிறதைப் பரலோக தேவன் கண்டார். அவர்களை எப்படியாகிலும் தன் பக்கம் திருப்பிக்கொள்ளச் சித்தமாகி, மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். நமக்காக மாம்சமான ஆண்டவர், தம்முடைய மாம்சத்தை கிழிக்கப்பட ஒப்புக்கொடுத்தார். அவருடைய இரத்தத்தை எல்லாம் ஊற்றிக் கொடுத்தார். இரத்தத்தினாலே பாவங்களறக் கழுவி மன்னித்தார். இரத்தத்தினாலே சாத்தானுடைய தலையைத் தகர்த்தார்.
அவர் மாம்சமாய் இருந்ததை வேதத்தில் பல இடங்களில் வசனங்கள் சுட்டிக் காண்பிக்கின்றன. அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணினார் என்று வேதம் சொல்லுகிறது.
அநேகர் ‘நான் ஜெபம் பண்ண உட்கார்ந்தால் தூக்கம் வந்து விடுகிறது, மாம்சம் பெலவீனமுள்ளதுதான் என்பதால், என்னால் ஜெபிக்க முடியவில்லை’ என்று சாக்குபோக்குச் சொல்லுகிறார்கள். இப்படி சாக்குபோக்குச் சொல்லுவார்கள் என்று கர்த்தர் முன் அறிந்ததினாலே, அவரும் நம்மைப்போல மாம்சமாகி, மாம்ச பெலவீனத்தை மேற்கொண்டு, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபம் பண்ணினார். அப்படி ஜெபம் பண்ணின ஆண்டவர், உங்களுக்கு உதவி செய்ய வல்லமையுள்ளவராயிருக்கிறார். அவரிடம் நீங்கள் பொய்யான காரணங்களைச் சொல்ல முடியாது.
வேதம் சொல்லுகிறது, “நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோமர் 8:26). தேவபிள்ளைகளே, உங்களுக்காக மாம்சமான இயேசுவின் வாழ்க்கையே உங்களுக்கு நல்ல முன் மாதிரி. அவர் உங்களுக்கு ஜெயம் தர வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
நினைவிற்கு:- “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலா. 5:24).