AppamAppam - Tamil

நவம்பர் 10 – மன்னியுங்கள், துதியுங்கள்!

“பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (மத். 5:24).

நீங்கள் கசப்போடும், வைராக்கியத்தோடும், மன்னிக்காத சுபாவத்தோடும், தேவ சமுகத்திலே நுழைய முடியாது. கர்த்தருக்குப் பிரியமான ஆராதனை செய்யவும் முடியாது. கசப்புள்ள மூத்த மகன், தகப்பனுடைய இனிய பிரசன்னத்திற்குள்ளே வர விரும்பாமல் வெளியே நின்றுவிட்டான்.

கசப்பான உள்ளம் நடனக் களிப்பை விரும்பாது. கீத வாத்தியங்களை விரும்பாது. தகப்பனோடு விருந்துண்பதை விரும்பாது. பரிதாபமாய் வெளியே நின்றுவிடும். சகோதரனை மன்னித்து ஏற்றுக்கொள்ள முடியாததே இதற்குக் காரணம். மரித்தவனைப் போல இருந்த சகோதரன் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டபோது அவனால் சந்தோஷம் கொள்ள முடியவில்லை.

தேவ பிரசன்னத்திற்குள் செல்லுவதற்கு முன்பாக, உங்களுடைய காணிக்கையை வைத்துவிட்டு, முதலாவது உங்கள் சகோதரனிடத்திற்கு சென்று மனப்பூர்வமாய் மன்னித்து ஒப்புரவாகிவிடுங்கள். பின்பு கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தி, ஆராதனை செய்யுங்கள். அப்பொழுதுதான் விடுதலையுடன் முழு இருதயத்தோடு தங்கு தடை இல்லாமல் உங்களால் கர்த்தருக்கு ஆராதனை செய்ய முடியும். மன்னிப்பின் சுபாவத்தை கர்த்தர் நமக்கு பிரசங்கித்திருக்கிறார். கல்வாரி சிலுவையிலே அதை செயல்படுத்தியும் காண்பித்திருக்கிறார்.

வேதம் சொல்லுகிறது, “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத். 5:44). இயேசு கிறிஸ்துதாமே கல்வாரி சிலுவையிலே தொங்கின போதும், தன்னைப் பகைத்து சிலுவையில் அறைந்த சத்துருக்களுக்காக கண்ணீரோடு ஜெபம் பண்ணினார். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்” (லூக்கா 23:34).

“துன்மார்க்கனுடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது” (நீதி. 15:8). துதிப்பதற்கு முன்பு உங்களுடைய உள்ளத்தை இயேசுவினுடைய இரத்தத்தினாலும், வசனத்தினாலும் கழுவி சுத்திகரியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களைத் தூய்மைப்படுத்தட்டும். வேதம் சொல்லுகிறது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9). “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).

தேவபிள்ளைகளே, துதிப்பதற்கு முன்பு மற்றவர் குற்றத்தை மன்னியுங்கள். தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். அப்பொழுது உங்கள் ஆராதனை சுகந்த வாசனையாய்க் கர்த்தரை மகிழப்பண்ணும்.

நினைவிற்கு:- “அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்” (எபே. 4:25).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.