No products in the cart.
நவம்பர் 08 – மரணபரியந்தம்
“நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளி. 2:10).
கர்த்தருக்கு முன்பாக நீங்கள் உண்மையும், உத்தமமுமாய் இருங்கள். ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல; மரணபரியந்தம் கர்த்தருக்காக உண்மையுள்ளவர்களாய் இருப்பீர்களேயானால், நித்திய நித்தியமான ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்ளுவீர்கள்.
ஆதித் திருச்சபைகளில் ஒன்றான சிமிர்னா சபைக்கு பல வகையான உபத்திரவங்கள் இருந்தன. அன்று இருந்த ரோம அரசாங்கம் ரோமப் பேரரசை வணங்க வேண்டுமென்றும், வேறு எந்த தெய்வத்தையும் வணங்கக்கூடாது என்றும் தடைச்சட்டம் விதித்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ளாததால் அவர்களைக் கொடூரமாய் சித்திரவதை செய்து உபத்திரவப்படுத்தினார்கள். பாடுகளின் வழியாய்ச் சென்ற அந்த திருச்சபையைத் தேற்றும்படி கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தம் “நீ மரணபரியந்தம் உண்மையுள்ளவனாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” என்பதாகும்.
தேவபிள்ளைகளே, உங்களுக்கும் இப்படிப்பட்ட உபத்திரவங்கள் நெருங்கி வரக்கூடும். உங்களுடைய அலுவலகத்திலே, நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் புறக்கணிக்கப்பட்டவர்களாய் காணப்படக்கூடும். கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகளும், நிந்தைகளும் உங்களைச் சூழ்ந்திருக்கக்கூடும். கலங்காதிருங்கள்.
இந்த சோதனை நேரத்திலும்கூட கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாய் இருங்கள். தரித்திரத்தை மேற்கொள்ள நீங்கள் பாவம் செய்யாதீர்கள். தரித்திரத்தை மேற்கொள்ள குறுக்கு வழியில் இறங்குவது சரியான தீர்வாகாது.
தானியேலைப் பாருங்கள். தானியேல் மரணபரியந்தம் உண்மையுள்ளவராய் இருக்கத் தீர்மானித்தார். அன்று பாபிலோன் அரசாங்கம் யூதர்களுக்கு விரோதமாய் இருந்தது. இராஜாவைத் தவிர, வேறு யாரையும் வணங்கக் கூடாது என்ற சட்டம் இருந்தபோதிலும், தானியேல் அதற்கு பயப்படாமல், மேல் வீட்டறையிலே தன் வழக்கத்தின்படியே மூன்று வேளையும் ஜெபம் பண்ணினார்.
அதன் பலனைப் பாருங்கள். சிங்கங்களின் கெபியிலே போடவேண்டிய சூழ்நிலை வந்தது. தானியேல் சிறிதும் பயப்படவில்லை. மரணம் நேரிடுகிறதாயினும் மரண பரியந்தமும் கர்த்தருக்கு உண்மையுள்ளவராய் இருக்கத் தீர்மானித்தார். அவரது உறுதியான தீர்மானம் கர்த்தரை மகிழ்வித்தது. அவர் சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார். தானியேலை மேன்மைப்படுத்தினார்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவைப் பாருங்கள். ராஜா நிறுத்தின பொற்சிலையை பணிவதில்லை என்று திட்டமாய்த் தீர்மானித்தார்கள். இதனால் அக்கினிச் சூளையிலே போடப்பட்டு துடிதுடித்து வெந்து மரிக்க வேண்டிய சூழ்நிலையிலும், அதை அன்போடு ஏற்றுக்கொள்ள முன் வந்தார்கள். ஆனால் கர்த்தர் அவர்களோடு அக்கினி ஜுவாலையிலே உலாவி, அவர்களைப் பாதுகாக்க வல்லமையுள்ளவராய் இருந்தார். தேவபிள்ளைகளே, நீங்கள் மரணபரியந்தமும் உண்மையுள்ளவர்களாய் இருக்கத் தீர்மானிக்கும்போது, கர்த்தர் உங்களுக்குத் துணையாய், பாதுகாவலாய் இருப்பார்.
நினைவிற்கு:- “வேறு சிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல் வாதிக்கப்பட்டார்கள்” (எபி. 11:35).