No products in the cart.
நவம்பர் 05 – மங்கியெரிகிற திரி!
“அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்” (ஏசாயா 42:3).
நம் தேவன் மங்கியெரிகிற திரியை அணையாமல் பிரகாசிக்கச் செய்கிற தேவனாக இருக்கிறார். உங்களுடைய வாழ்க்கையை சற்று ஆராய்ந்து பாருங்கள். முன்பு ஒரு காலத்தில் நீங்கள் கர்த்தருக்காக எரிந்து பிரகாசிக்கக்கூடிய விளக்காய் இருந்திருக்கக்கூடும். ஆதி அன்பிலே வல்லமையாய் செயல்பட்டிருக்கக்கூடும்.
ஆனால் இப்பொழுதோ, பலவிதமான சோதனைகளினால் உங்கள் உற்சாகத்தை இழந்து, ஜெப ஜீவியத்தை இழந்து மங்கியெரிந்துகொண்டிருக்கலாம். கர்த்தர் இன்றைக்கு உங்களை அனல் மூட்டி எழுப்ப சித்தமுள்ளவராய், “மங்கியெரிகிற திரியை நான் அணைப்பதில்லை” என்று சொல்லி வாக்குக் கொடுக்கிறார்.
விளக்கு மங்கி எரிவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், அதிலே போதுமான எண்ணெய் இல்லாமல் இருப்பதுதான். பரிசுத்த ஆவியானவரின் நிறைவு அனுதின வாழ்க்கையில் உங்களுக்குக் குறைவுபட்டுப் போனால் ஆவிக்குரிய உள்ளான விளக்கு உங்களில் மங்கி எரிய ஆரம்பிக்கும். திரியின் நீளம் குறைவாக இருந்து, எண்ணெயில் மூழ்காமல் போனாலும், விளக்கானது மங்கியெரிய ஆரம்பிக்கும். உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவரோடு ஆழமான ஜெபத்தொடர்பு கொள்ளாமல்போனால் உங்களுடைய பரிசுத்த ஜீவியம் மங்கியெரிய ஆரம்பித்துவிடும்.
பரிசுத்தமும், ஜெப ஜீவியமும் மங்குவதைப்போல வேதனையான காரியம் வேறு ஒன்றுமில்லை. இதனால் அநேக ஆவிக்குரிய உன்னதத்தின் ஆசீர்வாதங்களை நீங்கள் இழந்துபோகவேண்டிய சூழ்நிலை வந்துவிடுகிறது.
இஸ்ரவேல் ஜனங்களின் பரிசுத்தம் மங்கிப்போனபோது எரேமியா தீர்க்கதரிசியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “ஐயோ! பொன் மங்கி, பசும்பொன் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே. ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே” (புலம் 4:1,2) என்று துக்கத்தோடுகூட புலம்பி அழுது ஜெபித்தார்.
பரிசுத்த ஜீவியம் மங்கிப் போவதினால், தரிசனக் கண்களின் தூரப்பார்வையும் மங்கிப் போகிறது. பிரகாசமற்ற மனக்கண்கள் சோர்வை வெளிப்படுத்துகின்றன. தாவீது ராஜா சொல்லுகிறார்: “துயரத்தினால் என் கண்கள் குழி விழுந்து போயிற்று; என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப் போயிற்று” (சங். 6:7).
தேவபிள்ளைகளே, மங்கியெரிகிற உங்கள் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்ய வல்லமையுள்ளவர் உங்களோடிருக்கிறார். எந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர், மங்கியுள்ள உங்கள் வாழ்க்கையையும் பிரகாசிக்கச் செய்வார். உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தை அனல் மூட்டி எழுப்புங்கள். நீங்கள் இழந்துபோன எல்லா கிருபைகளையும் கர்த்தர் உங்களுக்கு மீண்டும் தருவார்.
நினைவிற்கு:- “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்” (எண். 6:25).