AppamAppam - Tamil

நவம்பர் 03 – மகிமையான கிரீடம்!

“அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்” (நீதி. 4:9).

இராஜாவின் தலையிலே கிரீடம் வைக்கப்பட்டிருக்கும். இந்த கிரீடம் பொன்னினாலும், முத்துக்களினாலும், வைரங்களினாலும், வைடூரியங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மிகுந்த அழகுள்ள அந்த கிரீடமானது, அவர் அரசாளுகிற ராஜா என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும். ஜனங்களுக்கு அவர் தலையாக விளங்குகிறார் என்பதற்கு அதுவே அடையாளம். அவர் அதிகாரமும், ஆளுகையும், வல்லமையும், சத்துவமும் மிகுந்தவர் என்பதை அது வெளிப்படுத்தும்.

உலகக் கிரீடங்கள் எல்லாம் மறைந்து போகக்கூடியவை. பொற்கொல்லனிடம் கொடுத்தால் ஒரே நிமிடத்தில் அந்த பொன்னை உருக்கி சாதாரண தங்கக்கம்பியாக மாற்றிவிடுவான். யுத்தத்தில் ஜெயிக்கும் எதிரி அரசன், அந்த கிரீடத்தைப் பறித்துக் கொண்டு போய்விடக்கூடும். இப்படிப்பட்ட அழிவுள்ள கிரீடங்களுக்காக எத்தனையோ பேர் யுத்தம் செய்து தங்கள் உயிரையே கொடுக்கிறார்கள்.

ஆனால், வேதபுத்தகமோ கண்களினால் காணக்கூடாத கிரீடங்களைக் குறித்து பேசுகின்றது. அவை கிருபையாகிய கிரீடம், இரக்கமாகிய கிரீடம் (சங். 103:4), மகிமையிலான கிரீடம் மற்றும் கனத்திலான கிரீடம் (எபி. 2:7). இந்த கிரீடங்கள் உலகப்பிரகாரமான கிரீடங்களைப் பார்க்கிலும் மகா மேன்மையான கிரீடங்கள். அப் பவுல், “அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்” (1 கொரி. 9:25) என்று எழுதுகிறார்.

கர்த்தர் உங்களைக் கிருபையினாலும், இரக்கங்களினாலும் முடிசூட்டுகிறார். கனத்தினாலும், மகிமையினாலும் அலங்கரிக்கிறார். இராஜாதி இராஜாவின் பிள்ளைகள் என்று நீங்கள் அழைக்கப்படுவது எத்தனைப் பெரிய பாக்கியம்! சிலர் கல்வியினால் கிடைத்த உயர்ப் பட்டங்களை கிரீடங்களாக எண்ணுகிறார்கள். வேறு சிலர் தங்களுடைய தொழிலைக் கிரீடமாக வைத்து டாக்டர், இஞ்சினியர், வழக்கறிஞர் என்று அழைத்துக் கொள்ளுகிறார்கள். அரசியல்வாதிகளுக்கு எம்.எல்.ஏ, எம்.பி. போன்ற பதவிகள் உண்டு.

ஆனால் தேவபிள்ளைகளுக்கு இருக்கும் உண்மையான கிரீடம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம்தான். தாவீது ராஜாவுக்கு உலகப்பிரகாரமான பல கிரீடங்கள் கிடைத்தாலும், அவர் தம் மேல் ஊற்றப்பட்ட அபிஷேகத்தையே மேன்மையான கிரீடமாக எண்ணினார். அவர் சொல்லுகிறார், “என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்” (சங். 92:10).

இந்த அபிஷேகத்தினால் உன்னத பெலன் உங்களுக்குள் வருகிறது. உன்னத ஆவியானவர் உங்களுக்குள் வந்து வாசம் பண்ணுகிறார். நீங்கள் வல்லமையையும் மகிமையையும் பெற்றுக்கொள்ளுகிறீர்கள். இந்த அபிஷேகத்தை யாரும் உங்களை விட்டு எடுத்துவிட முடியாது. இந்த அபிஷேகத்திலிருந்துதான் ஆவியின் வரங்கள் செயல்படுகின்றன. இனிமையான ஆவியின் கனி வெளிப்படுகிறது. தேவபிள்ளைகளே, இந்த அபிஷேகம்தான் உலக மனுஷரைப் பார்க்கிலும் உங்களை வித்தியாசமுள்ளவர்களாய் மாற்றுகிறது.

நினைவிற்கு:- “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” (சங். 23:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.