No products in the cart.
நவம்பர் 2 – மகா பலம்!
“உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது?” (நியா. 16:6).
இஸ்ரவேலின் நியாயாதிபதியாகிய சிம்சோனின் மகா பலம் எதைக்கொண்டு உண்டாயிருக்கிறதென்று அறிந்துகொள்ள தெலீலாள் விரும்பினாள். இன்றைக்கு உலகமும் உங்களுடைய பெலனைக் குறித்தும், உங்களிலுள்ள தேவ வல்லமையைக் குறித்தும் அறிந்துகொள்ள ஆசைப்படுவது உண்மையே.
சிம்சோனுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட பெலன் இருந்தது. அது சிறந்த உடல் பயிற்சியினாலோ, போஷாக்கு நிறைந்த உணவினாலோ ஏற்படுகிற பெலன் அல்ல. அல்லது தலைமுறை தலைமுறையாக வருகிற பெலனும் அல்ல. உலகத்தாரால் அறிந்துகொள்ள முடியாத விசேஷமானது.
தெலீலாள் சிம்சோனுடைய பெலனை கேள்விப்பட்டிருக்கவும், நேரில் பார்த்திருந்திருக்கவும்கூடும். காசா நகரத்து கதவுகளை அசைத்துப் பிடுங்கின, கழுதை தாடை எலும்பினால் ஆயிரம்பேரை அடித்து வீழ்த்தின, முந்நூறு நரிகளைப் பிடித்து அவைகளின் வால்களில் தீப்பந்தங்களை கொளுத்தின, பாலசிங்கத்தின் வாயை கிழித்துப்போட்டதுமான பெலன் அவனுக்கு எங்கே இருந்து வந்தது என்று அறிந்துகொள்ள அவள் ஆசைப்பட்டாள்.
சிம்சோனின் பதில் என்ன? “என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னைவிட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப் போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்” (நியா. 16:17). இந்த வசனத்தை வாசித்துப் பார்த்தால், நியாயாதிபதியாகிய சிம்சோனுக்குக்கூட தன்னுடைய பெலத்தின் ரகசியம் தெரியவில்லை என்றுதான் தோன்றக்கூடும். அவர் தன் பெலத்தின் ரகசியத்திற்கு தன் முடியைக் காரணமாய் கூறினார். கர்த்தருக்கு மகிமையை செலுத்தாதது எத்தனை குறைபாடு பாருங்கள்.
உண்மையில், சிம்சோனுடைய பலம் இரண்டு காரியங்களில் அடங்கி இருந்தது. முதலாவது, பரிசுத்த ஆவியானவருடைய வல்லமை, இரண்டாவது, பிரதிஷ்டையின் ஜீவியம். இந்த இரண்டு காரியங்களையும் ஒரு மனுஷன் இழக்கும்போது, நிச்சயமாகவே அவனுடைய பெலன் அவனைவிட்டுப் போய்விடும்.
பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து வரும் பெலனை உன்னத பெலன் என்று வேதம் சொல்லுகிறது (லூக்கா 24:49). இயேசு கிறிஸ்து சீஷர்களைப் பார்த்து ‘உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படுங்கள். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலன் அடைவீர்கள். உலகம் முழுவதிலும் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்’ (அப். 1:8) என்று சொன்னார். சிம்சோனுக்கு பெலன் கொடுத்தவரும் ஆவியானவர்தான். ‘கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்’ (நியா. 13:25). ‘கர்த்தருடைய ஆவியானவர் அவன்மேல் பலமாய் இறங்கினார்’ (நியா. 14:6) என்று வேதம் சொல்லுகிறது.
தேவபிள்ளைகளே, பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் இறங்கும்போது, உங்களுக்கு பெலன் கிடைக்கிறது. ஆனால், அந்த பெலனை பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு பிரதிஷ்டையின் ஜீவியமும், பரிசுத்தமான வாழ்க்கையும் மிகவும் அவசியம். கர்த்தரை ஒருபோதும் துக்கப்படுத்திவிடாதபடிக்கு அதிக ஜாக்கிரதையோடு நடந்து கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13).