No products in the cart.
நவம்பர் 01 – மறப்பதில்லை
“யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை” (ஏசா. 44:21).
‘நீ என்னுடையவன். நான் உன்னைப் பேர் சொல்லி அழைத்திருக்கிறேன். தாயின் வயிற்றிலே உன்னைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இந்த உலகம் செய்நன்றியை மறக்கிற ஒரு உலகம். உங்களிடத்தில் நன்மை பெற்ற பலரும் நீங்கள் செய்ததையெல்லாம் மறந்து உங்களுக்கு விரோதிகளாய் எழும்பக்கூடும். உங்களுடைய அன்பைப் பெற்றவர்கள் அந்த அன்பை மறந்து உங்களைத் தூஷிக்கிறவர்களாய் மாறிவிடக்கூடும். உங்களை ஏணியாகப் பயன்படுத்தி, உயர்ந்த நிலைமைக்கு வந்தவர்கள்கூட உங்களை அற்பமாய் எண்ணக்கூடும்.
ஆனால் யார் உங்களை மறந்தாலும், கைவிட்டாலும், கர்த்தர் ஒருநாளும் உங்களை மறப்பதில்லை. கர்த்தர் சொல்லுகிறார், “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது” (ஏசாயா 49:15,16).
கர்த்தர் உங்களை மறக்காமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, அவர் உங்களைச் சிருஷ்டித்து, தம்முடைய சாயலையும், தன் ரூபத்தையும் தந்து உங்களைத் தம்முடைய ஜனமாக்கிக் கொண்டார். அவர் உங்களுக்குச் சொந்தமானவர்.
மோசே இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து, “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படித் தெரிந்துகொண்டார்” (உபா. 7:6) என்றார்.
இரண்டாவது, அவர் உங்களுக்காக இரத்தக்கிரயம் செலுத்தி உங்களை மீட்டுக் கொண்டதினாலே உங்களை மறப்பதில்லை. அவர் உங்கள்மேல் அன்பு செலுத்தி, உங்களுக்காகப் பரலோகத்தைத் துறந்து, பூமிக்கு இறங்கி வந்தார். உங்களுக்காக பாரமான சிலுவையைத் தூக்கிக்கொண்டு எருசலேம் வீதி வழியாய்த் தள்ளாடி நடந்தார். உங்களுடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு, அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். உங்களை அவரால் எப்படி மறக்க முடியும்?
“எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்?… என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது” (ஓசி. 11:8) என்று சொல்லி கர்த்தர் எப்பிராயீமை நினைத்தருளினார்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் ஒருநாளும் உங்களை மறந்து போவதேயில்லை. நீங்கள் நினைத்ததற்கும் வேண்டிக்கொண்டதற்கும் மிக அதிகமாய் அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
நினைவிற்கு:- “நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்” (ஏசாயா 43:7).