AppamAppam - Tamil

அக்டோபர் 31 – பெலத்திலே உண்டாயிருக்கும் இராஜ்யம்!

“தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது” (1 கொரி. 4:20).
சார்லஸ் ஸ்பர்ஜன் என்ற தேவனுடைய ஊழியக்காரரை அறியாதவர்கள் ஒருவருமே இருக்க முடியாது. அவருடைய பிரசங்கங்கள் எல்லாம் மகா வல்லமை பொருந்தினதாய் இருக்கும். ‘உங்களுடைய வல்லமைக்கும், பிரசங்க சாதுரியத்துக்கும், தெய்வீக பெலத்துக்கும் காரணம் என்ன?’ என்று ஒருவர் கேட்டபோது, முதலில் அந்த தேவனுடைய ஊழியக்காரர் அவருக்கு தன்னுடைய அலுவலகத்தை சுற்றிக் காண்பித்தார். முடிவில் ஒரு குறிப்பிட்ட அறைக்குள்ளே அழைத்துக்கொண்டு போனார். ‘இந்த அறைதான் எனக்கு வல்லமையையும், தேவ பெலத்தையும் கொடுக்கிறது’ என்று சொன்னார்.
ஒரு அறை அப்படி என்ன வல்லமையைக் கொடுத்துவிட முடியும் என்று எண்ணி உள்ளே பார்த்தபோது, அங்கே ஏறக்குறைய நாற்பது, ஐம்பது பேர் முழங்கால் ஊன்றி ஸ்பர்ஜனுக்காக கண்ணீரோடு ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். “ஆண்டவரே, இன்று நடக்கப்போகும் கூட்டத்தில் உம்முடைய தாசனை வல்லமையாய்ப் பயன்படுத்தும். அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் உம்முடைய வசனத்தை உறுதிப்படுத்தும்” என்று மன்றாடிக் கொண்டிருந்தார்கள். அந்த ஊழியக்காரர், ‘இதுதான் என்னுடைய வல்லமையின் ரகசியம். இவர்கள் ஜெபிக்கிற ஜெபமே என்னை அக்கினி ஜுவாலையாக மாற்றுகிறது’ என்றார்.
உலகத்தில் ஆயிரக்கணக்கான மதங்களும், மார்க்கங்களும் உண்டு. அனைத்தும் சன்மார்க்க நெறிகளையும், தத்துவ ஞானங்களையுமே போதிக்கின்றன. ஆனால், கிறிஸ்தவ மார்க்கத்தின் மேன்மையே தேவனுடைய வல்லமையில்தான் இருக்கிறது. எனவேதான், அப்.பவுல் “தேவனுடைய இராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது” (1 கொரி. 4:20) என்று சொல்லுகிறார்.
உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நீங்கள் ஜெயங்கொண்டவர்களாய் விளங்க உங்களுக்கு வல்லமையும், பெலனும் தேவை. கர்த்தரே தெய்வம் என்று நிரூபிக்க அற்புதங்களும், அடையாளங்களும் தேவை. என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று முழங்க உயிர்த்தெழுந்த வல்லமை தேவை. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை ஊழியத்துக்கு அனுப்பும் முன்பாக பரிசுத்த ஆவியின் வல்லமைக்காக காத்திருக்கும்படிச் சொன்னார். “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார்” (அப். 1:8).
இயேசு கிறிஸ்துவை பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் நிரப்பின ஆவியானவர், சீஷர்களையும் அவ்வாறே நிரப்பினபடியினாலே அவர்கள் செல்லுகிற இடங்களில் எல்லாம் அற்புதங்கள் நடந்தன. இயேசுவே கிறிஸ்து என்று திட்டமும் தெளிவுமாக அவர்களால் பிரசங்கிக்க முடிந்தது. அற்புதங்களாலும், அடையாளங்களாலும் வசனத்தை உறுதிப்படுத்தினார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை ஆவியாலும், வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணும்படி அவருடைய உன்னத பெலத்துக்காக காத்திருங்கள் (ஏசா. 40:31).
நினைவிற்கு:- “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்” (லூக். 24:49).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.