AppamAppam - Tamil

அக்டோபர் 30 – மன்னியுங்கள், மறந்துவிடுங்கள்!

“…கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபே. 4:32).
மன்னிக்கும் சுபாவம் தெய்வீக சுபாவமாகும். நீங்கள் மன்னியாமல் கோபமும், வைராக்கியமும், கசப்பும் உங்களில் இருக்குமென்றால், சாத்தான் உங்களுக்குள் குடிபுகுவதற்கு அது வழி வகுக்கும். நீங்கள் மன்னித்து மறந்தால், உங்களுடைய இருதயத்தின் பளு இறங்கிவிடும். ஆவியால் நிரப்பப்படவும் அது உதவும்.
எப்படி மன்னிக்க வேண்டும் என்பதற்கு கிறிஸ்துவின் மன்னிப்பின் சுபாவத்தையே வேதம் அளவுகோலாக காண்பிக்கிறது. இயேசு நம்மை மன்னிக்க விரும்பி பரலோகத்தை விட்டு பூமிக்கு இறங்கி வந்தார். நமக்காக சிலுவையில் தன் இரத்தத்தை சிந்தி, அந்த இரத்தத்தால் பாவங்களற கழுவினார். வேதம் சொல்லுகிறது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9).
கர்த்தர் நம்மை மன்னிக்கிறது மாத்திரமல்ல, அதை நினையாமலிருப்பேன் என்றும் வாக்களிக்கிறார் (எபிரெயர் 8:12). நினையாமல் இருப்பது எப்படி? ஆம், உங்களுடைய பாவங்களை அவர் சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டுவிடுகிறார். கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் உங்களுடைய பாவங்களை விலக்கிவிடுகிறார். இரத்தாம்பரம் போல சிவப்பாய் இருந்த பாவங்களை எல்லாம் நீக்கி, இருதயத்தை பஞ்சைப் போல் வெண்மையாக்கி விடுகிறார்.
கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற நீங்கள், அவர் மன்னிக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய சகோதரர்களுக்கு மன்னிக்க வேண்டுமல்லவா? அவர்களை நீங்கள் மன்னிக்கும்போதுதான் கர்த்தருடைய மன்னிக்கும் தேவ அன்பை பூரணமாய் ருசிக்க முடியும். இயேசு சொன்னார், “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களேயானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்” (மாற்கு 11:25,26).
மற்றவர்களை மன்னிக்காத பட்சத்தில்தான் அநேகரை வியாதிகளும் பில்லி சூனியங்களும் மேற்கொள்ளுகின்றன. உங்களுக்குள்ளே கசப்பான, வைராக்கியமான சிந்தையிருக்குமானால், அதை வேரோடு பிடுங்கி எறிந்து போடுங்கள். அப்பொழுது தேவனுடைய ஆசீர்வாத நீரூற்றுக்கள் உங்களில் சுரக்க ஆரம்பித்து விடும்.
தேவபிள்ளைகளே, உங்களுக்கு யார் யார் மேல் கசப்பும், வைராக்கியமும் இருக்கிறதோ, அவர்களை மன்னித்து அவர்களுக்காகக் கர்த்தரிடத்தில் ஜெபியுங்கள். அப்பொழுது அவர் உங்களை விசேஷித்த விதமாய் ஆசீர்வதிப்பார்.
நினைவிற்கு:- “யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே’ (எபி. 12:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.