No products in the cart.
அக்டோபர் 29 – பரம குயவனும், பாத்திரங்களும்!
“மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின் மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?” (ரோமர் 9:21).
வேதத்திலே, மிகப்பெரிய பரிசுத்தவான்களுடைய வாழ்க்கை வரலாறுகளை வாசித்துப் பார்க்கும்போது, அவர்கள் பலமுறை உடைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, கர்த்தருடைய கிருபையினால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை அறியலாம். நொறுக்கப்பட ஒப்புக்கொடுக்கும்போதுதான் கனமுள்ள பாத்திரமாக நம்மை தேவனால் வனைய முடியும்.
கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்து, அவனுடைய ஒரே மகனை பலியிடச் சொன்னபோது, ஆபிரகாமினுடைய உள்ளம் எவ்வளவு கலங்கி உடைந்திருந்திருக்கும்! மூன்று நாட்கள் கர்த்தர் குறித்த மலையை நோக்கி ஈசாக்கை நடத்திச் சென்றபோது, அவருடைய இருதயம் எவ்வளவு அங்கலாய்த்து இருந்திருக்கும்! கர்த்தர் ஏன் அவரை அப்படிப்பட்ட பாதையிலே நடத்தினார்? ஆம், ஆபிரகாமை கனமுள்ள ஒரு பாத்திரமாக உருவாக்குவதற்காகத்தான்.
அதுபோலத்தான் யோபுவின் வாழ்க்கைப்பாதை அமைந்தது. பத்து பிள்ளைகளும் ஒரே நாளில் மரித்தபோது, அதுவும் வீடு இடிந்து விழுந்து சிதைக்கப்பட்ட நிலைமையிலே அவர்களுடைய சரீரத்தைக் கண்டபோது, பக்தனாகிய யோபுவின் உள்ளம் எவ்வளவு கலங்கி இருந்திருக்கும்! ஆடு, மாடுகள், சொத்துக்கள் ஆகிய இழப்புகள் பெரிய இழப்புகளல்ல, தான் வளர்த்த பிள்ளைகளை மரிக்க ஒப்புக்கொடுத்தது எவ்வளவு பெரிய இழப்பு! அவருடைய பாடுகள் இத்துடன் ஒரு முடிவுக்கு வந்துவிடவில்லை.
தொடர்ந்து, சரீரமெல்லாம் கொடிய புண்கள், பருக்கள், வேதனைகள், புடமிடுகிற அக்கினியின் ஊடாக கர்த்தர் அழைத்துச் சென்றார். நொறுக்கப்படுவதின் அவசியத்தை கற்றுக்கொடுத்தார். ஆனால் அந்தச் சோதனை நாட்களுக்குப் பிறகு யோபு பொன்னாக விளங்கினார். வேதத்திலே அவருக்கு நீங்காத இடம் கிடைத்தது.
கர்த்தர் கனமான பாத்திரமாய் ஒருவனை வனைய வேண்டுமென்றால், முன்னதாக அவனை பாடுகளின் பாதையிலே அழைத்துச் சென்று புடமிட்டு அதன் பின்பு மேன்மைப்படுத்தி உயர்த்துகிறார். குயவன் மண்பாண்டங்களை வனையலாம். தச்சன் மரபாண்டங்களை வனையலாம். ஆனால் கர்த்தர் வனைகிற பாத்திரத்தின் பெயர் என்ன? அதுதான் கிருபாபாத்திரங்கள் (ரோமர் 9:23).
பரம குயவன் வனையும் பாத்திரங்கள் அவருடைய கிருபையின் ஐசுவரியத்திலிருந்து வனையப்படும் பாத்திரங்களாகும். தகுதியில்லாதவர்கள் மேல்கூட அன்பும், இரக்கமும் பாராட்டி, அந்த கிருபையின் பாத்திரங்களை வனைகிறார். தேவ தயவை அளவில்லாமல் ஊற்றி, ஊற்றி கிருபையின் மேல் கிருபை பெறச் செய்கிறார்.
தேவபிள்ளைகளே, கர்த்தராகிய பரம குயவன் உங்களை கிருபையின் பாத்திரமாக உருவாக்கி பயன்படுத்த விரும்புகிறார். பாடுகளைக் கண்டு அஞ்சாமல், உங்களை ஒப்புக்கொடுக்க முன்வாருங்கள்!
நினைவிற்கு:- “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்” (யோவான் 1:14,16).