AppamAppam - Tamil

அக்டோபர் 27 – எங்கும்! எங்கும்!

“நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது” (யோவான் 4:21).
பிதாவை எங்கும் தொழுதுகொள்ளும் காலம் நம்முடைய காலம்தான். பழைய ஏற்பாட்டிலே தொழுது கொள்ளுவதற்கான குறிப்பிட்ட இடங்கள் இருந்தன. இஸ்ரவேலரில் சிலர், சமாரியா மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள். சிலர் எருசலேமிலுள்ள தேவாலயத்தில் தொழுதுகொண்டு வந்தார்கள். இதுவே அவர்களுடைய தொழுகை ஸ்தலங்களாயிருந்தது.
புதிய ஏற்பாட்டுக்கு வரும்போது, கர்த்தர் தொழுகை ஸ்தலத்தை முக்கியத்துவப்படுத்தவில்லை. ஆனால் தொழுதுகொள்ளும் விதத்தையோ முக்கியத்துவப்படுத்தினார். நீங்கள் எப்படி தொழுதுகொள்ள வேண்டும்? ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். முழு இருதயத்தோடும், முழு மனதோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலர் ஆலயத்தை முக்கியத்துவப்படுத்தினார்கள். எருசலேம் தேவாலயத்தை விக்கிரகமாய் மாற்றிவிட்டார்கள். கர்த்தரையோ விட்டு விட்டார்கள். ஆகவே கர்த்தர் எருசலேம் தேவாலயத்தை இடிக்கும்படி ஒப்புக்கொடுக்க வேண்டியதாயிற்று.
நம் தேவன் கைகளால் கட்டப்பட்ட ஆலயத்தில் வாசம் பண்ணுகிறது இல்லை. வேதம் சொல்லுகிறது, “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1 கொரி.3:16).
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள். உங்களிடத்திலிருந்து எழும்புகிற ஜெபம் ஆவியோடும், உண்மையோடும் இருக்க வேண்டும். எந்த இடத்திலும் ஜெபிக்க கர்த்தர் உங்களுக்கு விடுதலையைத் தந்திருக்கிறார். அப். பவுல், “புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ண வேண்டுமென்று விரும்புகிறேன்” (1 தீமோ. 2:8) என்று எழுதுகிறார். “எல்லா இடங்களிலும்” என்ற வார்த்தையைச் சிந்தித்துப் பாருங்கள். பிதாவை எங்கும் தொழுதுகொள்ளும் காலம் வரும் என்று கர்த்தர் சொன்ன வார்த்தை எவ்வளவாய் நிறைவேறுகிறது!
இயேசுவைப் பாருங்கள். அவர் வனாந்தரமான இடத்தில் ஜெபித்தார் (மாற்கு 1:35). வனாந்தரத்தில் தனித்துப்போய் ஜெபித்தார் (லூக்கா 5:16) மலைமீது ஏறி ஜெபித்தார் (லூக்.6:12). கெத்செமனே தோட்டத்தில் ஜெபித்தார் (லூக்கா 22:44).
நீங்கள் ஜெபிக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். ஆவியோடும் உண்மையோடும் ஜெபிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். சிலர் தலை வணங்கி ஜெபிக்கிறார்கள் (யாத். 12:27). சிலர் கைகளை உயர்த்தி ஜெபிக்கிறார்கள் (லேவி. 9:22, லூக். 24:50). சிலர் கண்களை வானத்துக்கு ஏறெடுத்து ஜெபிக்கிறார்கள் (சங். 25:15, அப். 7:55). சிலர் முகங்குப்புற விழுந்து ஜெபிக்கிறார்கள் (ஆதி. 17:3, லூக்.17:16).
தேவபிள்ளைகளே, எந்த நிலையில் ஜெபிக்கிறீர்கள், எந்த இடத்தில் ஜெபிக்கிறீர்கள் என்பவை முக்கியம் அல்ல. ஆனால் ஆவியோடும் உண்மையோடும் ஜெபிப்பதும், விசுவாசத்தோடும், சுத்த இருதயத்தோடும் ஜெபிப்பதும் மிகவும் அவசியம்.
நினைவிற்கு:- “எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” (1 தீமோ. 2:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.