No products in the cart.
அக்டோபர் 25 – இம்மட்டும், இனிமேலும்!
“அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும், சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்” (1 சாமு. 7:12).
கர்த்தர் இம்மட்டும் உங்களுக்கு உதவி செய்து வருகிறார். இம்மட்டும் கிருபை பாராட்டி வருகிறார். கழுகு தன் குஞ்சுகளைத் தன் செட்டைகளிலே சுமந்து கொண்டு போவதுபோல, கர்த்தர் இம்மட்டும் சிலுவை சுமந்த தன் தோள்களிலே உங்களைத் தூக்கி சுமந்துக் கொண்டு செல்லுகிறார். தேவபிள்ளைகளே, இந்த வேளையிலே உங்களுடைய உள்ளம் நன்றியால் நிரம்பட்டும்.
அன்று சாமுவேலின் உள்ளம் பொங்கினது. தேவனைப் பற்றிய துதியினாலும், மகிழ்ச்சியினாலும் இருதயம் களிகூர்ந்தது. ஒரு தூணை எடுத்து நிறுத்தி, “இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிச் செய்தார்” என்று சொல்லி அதற்கு “எபெனேசர்” என்று பேரிட்டார். அது முதல் “எபெனேசர்” என்கிற வார்த்தையானது, கர்த்தருடைய நாமங்களில் ஒன்றாய் விளங்குகிறது. “எங்களுக்கு உதவிச் செய்கிற தேவன்” என்பது அந்த வார்த்தையின் அர்த்தம்.
“இம்மட்டும் எங்களுக்கு உதவி செய்தார் அவர் எபெனேசர்” என்று சொல்லித் துதிக்கத் துதிக்க உங்கள் உள்ளம் சந்தோஷத்தால் நிரம்புகிறது. அதே நேரத்தில், ‘இதுவரை உதவிச் செய்தவர், இனிமேலும் உதவிச் செய்வார்’ என்கிற விசுவாசமும் எழும்புகிறது. ஆம், இதுவரை எபெனேசராய் இருந்தவர், இனிமேல் இம்மானுவேலராயும் இருப்பார்.
தாவீது ராஜா ஆண்டவரை எபெனேசராகவும், இம்மானுவேலராகவும் கண்டார். அவர் கர்த்தரை நோக்கி: “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? கர்த்தராகிய ஆண்டவரே, இது இன்னும் உம்முடைய பார்வைக்கு கொஞ்ச காரியமாயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற தேவரீர் உம்முடைய அடியானுடைய வீட்டைக் குறித்து வெகுதூரமாயிருக்கும் காலத்துச் செய்தியை மனுஷர் முறைமையாய்ச் சொன்னீரே” (2 சாமு. 7:18,19) என்றார்.
தாவீது ராஜாவாய் உயர்ந்தபோதிலும், கர்த்தர் அதுவரையிலும் தனக்கு எபெனேசராய் இருந்து வழிநடத்தின எல்லா பாதைகளையும் நினைவு கூர்ந்தார். அவர் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த காலங்களில் கர்த்தர் எப்படி தன்னுடைய மேய்ப்பராய் இருந்தார் என்பதையும், எப்படி சிங்கத்துக்கும், கரடிக்கும், கோலியாத்துக்கும் நீங்கலாக்கி விட்டார் என்பதையும், எப்படி வெற்றியாய் வழிநடத்தினார் என்பதையும் சிந்தித்துப் பார்த்தார். இனிமேலும் அவர் என்னை நடத்துவார் என்று விசுவாசித்தார். கர்த்தர் தமக்குச் செய்ய போகிற மகிமையான காரியங்களை எல்லாம் எண்ணி எண்ணி கர்த்தரைத் துதித்து மகிழ்ந்தார்.
தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை அறியாத காலத்திலும்கூட அவர் உங்கள்மேல் இரக்கம் பாராட்டி, உங்களைப் பாதுகாத்து வழிநடத்தினதை எல்லாம் நன்றியுடன் தியானித்துப் பாருங்கள். இன்று நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள். அவர் உங்களைப் பாதுகாத்து முற்றுமுடிய வழிநடத்துவார்.
நினைவிற்கு:- “அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்” (ஆதி. 32:10).