AppamAppam - Tamil

அக்டோபர் 24 – இருந்தால்! இருந்தால்!

“கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்?” (நியா. 6:13).
‘இருந்தால்’ என்ற வார்த்தை வேதாகமத்தில் அநேக இடங்களில் காணப்படுகிறது. சில இடங்களில் இந்த வார்த்தை சந்தேகமாய்த் தொனிக்கிறது. சில இடங்களில் எச்சரிப்பாயும், சில இடங்களில் உற்சாகப்படுத்துகிறதாயும் இருக்கிறது.
தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால்.. (ரோமர் 8:31). கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால்… (எண். 14:8). கர்த்தர் எங்களோடே இருந்தால்… (நியா. 6:13) என்றெல்லாம் வேதத்தில் வாசிக்கிறோம். ‘தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால்’ என்று எழுதிவிட்டு அப்போஸ்தலனாகிய பவுல் சிந்திக்க ஆரம்பிக்கிறார். ஆ, அது எவ்வளவு அருமையான பாக்கியம்!
தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதியாய் இருப்பவன் யார்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் என்று சிந்தித்த தாவீது ராஜா சொல்லுகிறார்: “எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன்” (சங். 3:6).
தேவன் நம் பட்சத்திலிருந்தால் என்று சொல்லி ஆபகூக் சிந்திக்கிறார்: “அத்திமரம் துளிர்விடாமற் போனாலும்… ஒலிவ மரத்தின் பலன் அற்றுப் போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற் போனாலும்… தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்” (ஆபகூக் 3:17,18). கர்த்தர் எங்களோடே இருந்தால் என்று கிதியோன் சிந்தித்தார்: “கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்” என்கிறார் (நியா. 6:13).
கர்த்தர் சொல்லுகிறார், “நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்” (ஆதி. 28:15). “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” (யாத். 33:14) என்றும் கர்த்தர் சொன்னார்.
“நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (உபா. 20:1). “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன் பேரில் பற்றாது” (ஏசாயா 43:2).
தேவபிள்ளைகளே, கர்த்தர் எப்போதும் உங்களோடுகூடவே இருக்கிறார். நீங்கள் எங்கே போனாலும் அவர் உங்களோடுகூட வருகிறார். அதை ஒருபோதும் மறந்து போகாதேயுங்கள்! நான் உன்னோடுகூட இருப்பேன் என்று கர்த்தர் கொடுத்த எல்லா வாக்குத்தத்தங்களையும் விசுவாசித்து கர்த்தரைத் துதிப்பீர்களாக.
நினைவிற்கு:- “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.