No products in the cart.
அக்டோபர் 23 – பழைய மனுஷனும், புதிய மனுஷனும்!
“சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே” (கொலோ. 3:10).
எருக்கஞ்செடியின் இலையிலே சில புழுக்கள் இலையோடு ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தப் புழுக்கள் சாதாரணமான புழுக்களல்ல. வண்ணத்துப் பூச்சியாக மாறக்கூடிய புழுக்கள். சில நாட்களுக்குள் அந்தப் புழுக்கள் அந்த இலையினை உட்கொண்டு முதிர்ச்சியடைந்த ஒரு புழுவாக மாறும். அதன் பின்பு கூட்டுப் புழுவாகி அப்படியே சலனமற்று பல நாட்கள் தொங்கிக் கொண்டிருக்கும். திடீரென்று ஒரு நாள் அது ஒரு வண்ணத்துப் பூச்சியாக எழும்பி செட்டைகளை அடித்து அழகாக பறந்து செல்லும்.
அதற்கு ஜீவன் ஒன்றுதான். ஆனால் அதன் வாழ்க்கையோ இரண்டு வகையானது. ஒன்று புழுவின் வாழ்க்கை. மற்றது வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை. அதுபோலவே ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் பழைய மனுஷனையும் காணலாம். கிறிஸ்துவின் சாயலான மறுரூபமாக்கப்பட்ட புதிய மனுஷனையும் காணலாம்.
ஆதாமுக்குள் நீங்கள் பழைய மனுஷனாயிருக்கிறீர்கள். கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள். ரோமர் 6-ம் அதிகாரம், எபேசியர் 4-ம் அதிகாரம், கொலோசெயர் 3-ம் அதிகாரம் ஆகியவற்றில் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய காரியங்கள் பற்றி அங்கே எழுதப்பட்டிருக்கிறது.
1. பழைய மனுஷனை சிலுவையில் அறையவேண்டும்:- (ரோமர் 6:6).
இந்த பழைய மனுஷன்தான் உங்களுடைய பாவ சுபாவங்கள் நிறைந்த பழைய ஆதாம். நீங்கள் செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, அவைகளை அறிக்கையிட்டு விட்டுவிட உறுதியான தீர்மானம் செய்வதுமே பழைய மனுஷனை சிலுவையில் அறைவதாகும். உங்களுடைய எல்லாப் பாவங்களும், மீறுதல்களும் அந்த இயேசுவின் மேல், சிலுவையில் இறங்கின. அதன்மூலம் அவருடைய இரத்தம் உங்களைப் பாவங்களற கழுவுகிறது. உங்களைச் சுத்திகரிக்கிறது (1 யோவான் 1:7).
2. பழைய மனுஷனை களைந்து போடவேண்டும்:- (கொலோ. 3:9).
‘பழைய மனுஷனையும், அவன் செய்கைகளையும் களைந்துபோடுங்கள்’ என்று வேதம் சொல்லுகிறது. ஒரு கூட்டுப் புழுவுக்குள் இருந்து வருகிற வண்ணத்துப் பூச்சி, பழைய நிலையையும், பழைய புழு வாழ்க்கையையும், பழைய சுபாவங்களையும் களைந்துபோட்டு, புது சிருஷ்டியாய் செட்டைகளை அடித்து எழும்புகிறது. அதுபோலவே, நீங்களும் பாவ சுபாவங்களைக் களைந்துபோட்டு, உன்னதத்துக்குரிய தேவனுடைய சாயலைத் தரித்துக்கொள்வீர்களாக.
3. புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள வேண்டும்:- (எபே. 4:24).
பழைய மனுஷனைக் களைந்ததோடு விட்டுவிடாமல், கிறிஸ்துவாகிய புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். கிறிஸ்துவின் சுபாவங்கள் உங்களில் உருவாகட்டும். கிறிஸ்துவினுடைய வல்லமையோடு முன்னேறிச் செல்லுங்கள். வேதம் சொல்லுகிறது, “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபே. 4:24).
நினைவிற்கு:- “நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்… வேண்டிக் கொள்கிறேன்” (எபே. 3:16,19).