No products in the cart.
அக்டோபர் 20 – பழக்கமும், வழக்கமும்!
“…ஆற்றினருகே, வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்” (அப். 16:13).
அப். பவுலுக்கு வழக்கமாய் ஜெபம் பண்ணுகிற இடம், ஒரு ஆற்றங்கரையாய் இருந்தது. அந்த ஜெபம் பண்ணுகிற இடத்தை நோக்கி அநேகம்பேர் ஓடிவர ஆரம்பித்தார்கள். தங்களுடைய பிரச்சனைகளுக்கு விடிவுகாண, தங்களுடைய வேதனையிலிருந்து ஆறுதல்பெற அவரிடம் வந்தார்கள். ஆகவே அப். பவுல் அதை ஜெபிக்கிற இடமாக மாத்திரமல்லாமல், உபதேசிக்கும் இடமாகவும் பயன்படுத்தினார்.
இயேசுகிறிஸ்து ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்கு செல்லுவதை தம்முடைய வழக்கமாய்க் கொண்டார் (லூக். 4:16). ஒலிவ மலைக்கு சென்று ஜெபிப்பதையும் தம்முடைய வழக்கமாய்க் கொண்டார் (லூக். 22:39). ஜனங்களுக்கு நன்மை செய்வதையும் தம்முடைய வழக்கமாகக் கொண்டு வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கினார் (அப். 10:38).
ஒரு செயல் ஒருவனுக்கு பழக்கமாய் இருப்பதும், வழக்கமாய் இருப்பதும் அவனவனது கையிலேயே இருக்கிறது. ஒரு காரியத்தை பழக்கப்படுத்திக் கொண்டால், அது வழக்கமாகி விடுகிறது. சிலர் பாவத்தை பழக்கமாக்கிவிட்டு, பழகிவிட்டேன் விடமுடியவில்லை என்று வேதனையோடு சொல்லுகிறார்கள்.
நம் தேசத்தில், குடிப்பழக்கம், அளவுக்கு மீறி கடன் வாங்கும் பழக்கம், குறைகூறும் பழக்கம், கோள் சொல்லும் பழக்கம், ஒற்றுகேட்கும் பழக்கம், பரியாசம் செய்யும் பழக்கம், பொய்சொல்லும் பழக்கம் என்று பல வகையான பழக்கங்களைப் பார்க்கலாம். இந்த பழக்க வழக்கங்கள் தீமையை நோக்கியே நடத்தி செல்லுகிறது.
எனவே, நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதிகாலை எழுந்து தேவனைப் பாடித் துதிப்பது ஒரு நல்ல பழக்கம். அப்படி நீங்கள் பழக்கப்படுத்தி ஜெபிக்கும்போது, நீங்கள் எந்த ஊருக்கு போனாலும், எந்த இடத்தில் தங்கினாலும், அந்தப் பழக்கத்தை விடமாட்டீர்கள். அந்த பழக்க வழக்கம் உங்களை பரிசுத்த பாதையிலே வழிநடத்தும். சிலர் வேதத்தை வாசிக்கிற பழக்கத்தை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது எத்தனை அருமையான நல்ல பழக்க வழக்கம்!
ஓய்வுநாளில் சபை கூடுதலில் பங்கு பெறுவது உங்கள் வழக்கமாய் இருக்கட்டும். மாதந்தோறும் ஒழுங்காக கர்த்தருக்கு தசமபாகத்தை கொடுப்பது உங்களுக்கு வழக்கமாய் இருக்கட்டும். கர்த்தருக்கு சாட்சி சொல்லுவது வழக்கமாக மாறட்டும். சிறு வயதிலிருந்தே இந்தப் பழக்க வழக்கங்களை நீங்கள் கற்றுக்கொண்டால், நித்தியத்திலே நீங்கள் முதலாவதாய்க் காணப்படுகிறவர்களாய் விளங்குவீர்கள்.
சாத்தான் கெட்ட பழக்கவழக்கங்களை ஜனங்களின் மத்தியிலே விதைக்கிறான். அப்.பவுல் எழுதுகிறார், “நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்” (எபே. 2:2). தேவபிள்ளைகளே, நீங்கள் நன்மையான பழக்கவழக்கங்களை மேற்கொண்டு ஜெயங்கொண்டவர்களாய் விளங்குவீர்களாக!
நினைவிற்கு:- “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே. 2:7).