No products in the cart.
அக்டோபர் 19 – ஒருமனமும், எழுப்புதலும்!
“அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருந்தார்கள்” (அப். 2:1).
ஆதி அப்போஸ்தலர்களின் நாட்கள் ஒரு பெரிய எழுப்புதலின் நாட்களாகவும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஊற்றப்பட்ட நாட்களாகவும், ஆத்தும அறுவடை துரிதமாய் நடந்த நாட்களாகவும், இருந்தன. காரணம், அவர்களுக்குள் நல்ல ஒருமனப்பாடு இருந்தது. பேதுருவின் பிரசங்கத்தினால் மூவாயிரம் பேர் தொடப்பட்டு இரட்சிக்கப்பட்டார்கள் (அப். 2:41) என்று வேதம் சொல்லுகிறது.
அந்த பெரிய அறுவடையின் ரகசியம் என்ன தெரியுமா? “அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று…” (அப். 2:14) என்று வேதம் சொல்லுகிறது. ஆம், “பதினொருவரோடுங்கூட பேதுரு” என்பதுதான் ரகசியம். பிரசங்கிக்கிற ஒரு பேதுருவை ஜெபத்தில் தாங்கும்படி ஒருமனமுள்ள பதினொருபேர் தயாராக நின்றார்கள். ஆகவேதான் அந்த மாபெரும் வெற்றியான ஆத்தும ஆதாயம் கிடைத்தது.
இன்று ஏன் நம்முடைய மத்தியிலே எழுப்புதல் இல்லை? ஏன் எதிர்பார்க்கிறபடி ஆத்தும அறுவடை நடப்பதில்லை? ஏன் யுத்தக்களங்களில் தோல்வி? ஏன் ஊழியர்களோடுகூட இணைந்து கர்த்தர் கிரியை செய்ய முடிவதில்லை? அன்பும், சகோதர ஐக்கியமும், ஒருமனப்பாட்டின் ஆவியும் இல்லாததே காரணம். அன்பு தாழ்ச்சிகளும், சமாதான குறைவுகளும் எழுப்புதலை தடுத்து நிறுத்துகின்றன. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கிப் பாருங்கள். பரலோகத்தில் தேவதூதர்களுக்கிடையே இருக்கிற ஒருமனதைச் சிந்தித்துப் பாருங்கள்.
கர்த்தர் மனுஷனை சிருஷ்டிக்கும்போதே அவனோடு ஒருமனமானார். ‘நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியும் உண்டாக்குவோமாக’ என்று சொல்லி மனுஷனைச் சிருஷ்டித்தார். அப்பொழுதே பரலோகத்தில் ஒருமனம் ஏற்பட்டது. இயேசு பிதாவை நோக்கி ஜெபிக்கும்போது, “நாம் ஒன்றாயிருக்கிறதுபோல” என்றுச் சொல்லி ஜெபிக்கிறார் (யோவான் 17:22). ஆம், பரலோகத்தில் யாவரும் ஒன்றாயிருக்கிறார்கள், ஒருமனமாயிருக்கிறார்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி ‘பரமண்டலத்திலே இருக்கும் ஒருமனம் பூமியிலும் காணப்படுவதாக’ (மத். 6:10) என்று கர்த்தருடைய ஜெபம் சொல்லுகிறது.
இசைக் கச்சேரிகளிலே, பலவகையான வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. ஆனால் அதை முன்னின்று நடத்துபவர் அவைகளை இணைத்து, ஒவ்வொரு இசைக்கருவிகளையும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகிற விதத்தில் இயக்கி பாடல்களை இனிமையாக அமையச் செய்கிறார். ஒன்றுக்கொன்று இணைப்புள்ள அந்த இசை நம் உள்ளத்தைக் கவருகிறது. மகிழ்ச்சியாக்குகிறது. அதுபோலவே, நம் சரீரத்தில் பல அவயவங்கள் இருந்தாலும், ஒவ்வொரு அவயவத்திற்கும் வேறுபட்ட கடமைகள் இருந்தாலும், அவை அனைத்தும் சரீரத்தோடு இணைக்கப்பட்டு ஒருசேர இயங்குவது அவசியம்.
தேவபிள்ளைகளே, தேவனிடத்திலும், தேவபிள்ளைகளிடத்திலும் ஒருமனப்பாட்டுடன் இருந்தால்தான் நீங்கள் கர்த்தருக்காகப் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். ஒருமனப்பாட்டைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் பிரிவினைகளுக்கு இடம் கொடுக்காதேயுங்கள். ஒருமனப்பாட்டில் எப்போதும் நிலைத்திருங்கள்.
நினைவிற்கு:- “நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்” (பிலி. 2:2).