No products in the cart.
அக்டோபர் 17 – தேவதூதனும், தெய்வீக சுகமும்!
“சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்” (யோவான் 5:4).
பெதஸ்தா குளத்தில் அற்புதங்கள் நிகழக்கூடிய ஒரு விசேஷ சிறப்பு இருந்தது. தேவதூதன் எப்பொழுதெல்லாம் அந்தக் குளத்தில் இறங்கி கலக்குகிறானோ, அப்பொழுதெல்லாம் அதில் முதலில் இறங்குகிறவர்கள் அற்புத சுகத்தைப் பெறுவார்கள்.
பெதஸ்தா என்ற வார்த்தைக்கு “இரக்கத்தின் வீடு” என்பது அர்த்தமாகும். தேவதூதன் மூலமாக அந்த இரக்கம் வெளிப்பட்டது. அந்த தேவதூதன் வியாதியஸ்தர் மேல் அதிகமாக இரக்கம் கொண்டவனாக இருந்திருந்தால் அடிக்கடி வந்து குளத்தைக் கலக்கியிருக்கக்கூடும். அதிகமான ஜனங்கள் சுகத்தைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.
அந்தத் தேவதூதன் எவ்வளவு காலம் இறங்கி வந்து குளத்தைக் கலக்கிக்கொண்டு இருந்திருப்பான்? ஆம், இயேசுகிறிஸ்து சிலுவையிலே மரிக்கும்வரை அவன் கலக்கியிருந்திருக்கக்கூடும். இயேசு சிலுவையிலே நம்முடைய நோய்களையும், வியாதிகளையும் சுமந்துத் தீர்த்தார். மேலும் தாமாகவே தம்முடைய சரீரத்தின் தழும்புகளினால் எல்லா வியாதிகளையும், நோய்களையும் நீக்க அவர் வல்லமையுள்ளவராக இருந்தபடியினாலே, பெதஸ்தா குளத்திற்கு அவசியமில்லாமல் போய்விட்டது. அதை கலக்குகிற தேவதூதனுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது.
உங்களுடைய பெலவீன நேரங்களிலும், வியாதி நேரங்களிலும் கல்வாரிச் சிலுவையை நோக்கிப் பார்க்கும்போது, கிறிஸ்துவின் இரத்தமாகிய கீலேயாத்தின் பிசின் தைலம் உங்கள்மேல் வழிகிறது. அது உங்களுடைய வியாதிகளையும் நோய்களையும் குணமாக்குகிறது. கிறிஸ்துவின் தழும்புகள் உங்களைத் தொட்டுக் குணமாக்குகின்றன.
ஆகவே, இன்று நீங்கள் பெதஸ்தா குளத்தைத் தேடி ஓடிப்போய் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உங்கள் பாவங்களை சிலுவையில் சுமந்ததுடன் நின்றுவிடவில்லை. உங்களுடைய நோய்களையும், பெலவீனங்களையும்கூட சிலுவையிலே சுமந்திருக்கிறார். இயேசு உங்களுடைய பரிகாரியாயிருக்கிறார் (யாத். 15:26). வேதம் சொல்லுகிறது, “அவர் உன் அப்பத்தையும், உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” (யாத். 23:25). “அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (மத். 8:17).
தேவபிள்ளைகளே, கர்த்தர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். தெய்வீக சுகத்தில் ஐசுவரியமுள்ளவர். உங்களுக்கு ஆரோக்கியத்தை வரப்பண்ண அவர் வல்லமையுள்ளவர். இப்பொழுதே அவரை நோக்கிப் பாருங்கள். சூரியனைக் கண்ட பனி மறைந்துபோவதுபோல உங்களுடைய பெலவீனங்களும், நோய்களும் நீங்கிப்போகும்.
நினைவிற்கு:- “ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்” (மல்கி. 4:2).