No products in the cart.
அக்டோபர் 15 – விசுவாசமும், அபிஷேகமும்!
“…என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார்” (யோவான் 7:38,39).
“கிறிஸ்து அபிஷேக நாதர். அவர் என்னை நிச்சயமாகவே அபிஷேகம் பண்ணுவார்” என்ற விசுவாசத்தோடு நீங்கள் காத்திருக்கும்போது, கர்த்தர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைத் தந்தருளுவார். தேவன் ஆவியாயிருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசியுங்கள். அந்த ஆவியானவர் எனக்குள் வந்து உணர்த்துவார், போதிப்பார், தேற்றுவார், சகல சத்தியத்திற்குள்ளும் வழி நடத்துவார் என்பதை எல்லாம் விசுவாசியுங்கள்.
நீங்கள் அப்படி விசுவாசிக்கும்போது ஜீவத்தண்ணீருள்ள நதியான ஆவியானவர் உங்களுக்குள் கடந்து வருவார். கிறிஸ்தவ அனுபவம் வெறும் இரட்சிப்போடும், ஞானஸ்நானத்தோடும் நின்று விடுவதில்லை. அதற்கு மேலாக அபிஷேகம் பெற்று விசுவாசத்தோடு நீங்கள் முன்னேறிச் செல்லவேண்டும்.
அப்.பவுல், நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று அன்றைக்கு எபேசு விசுவாசிகளினிடத்தில் கேட்டபோது, “அவர்கள் பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்” (அப். 19:2,6).
உங்கள் விசுவாசம் வளர்ந்து பெருக வேண்டுமானால், உங்களுக்குப் பரிசுத்த ஆவி மிகவும் அவசியம். அநேகர் விசுவாசிகளாய் இருக்கிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நம்புவதில்லை. இன்னும் அநேகர் தாங்கள் இரட்சிக்கப்பட்டவுடனே அபிஷேகத்தைப் பெற்றுவிட்டதாக தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், அப். பவுல் எபேசு விசுவாசிகளைப் பார்த்து பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டீர்களா என்று கேட்கவேண்டியதில்லையே.
உங்களுடைய விசுவாசக் கண்களினால் கர்த்தரை மிகவும் அன்புள்ள தகப்பனாகக் காணுங்கள். வாக்களித்ததை நிறைவேற்றுகிறவராகப் பாருங்கள். சகல நன்மையான ஈவுகளையும் தம் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியோடு தருகிற பாசமுள்ளவராகப் பாருங்கள்.
இயேசு சொன்னார், “நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத். 7:11). “பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம்” (லூக். 11:13).
பரிசுத்த ஆவியைப் பெறும்படி விசுவாசத்தோடு உங்கள் இருதயத்தை சுத்தப்படுத்துங்கள். கறை திரை இல்லாமல் இயேசுவின் இரத்தத்தினால் உள்ளத்தை கழுவுங்கள். உங்களுடைய உள்ளமாகிய பாத்திரத்தைச் சுத்திகரித்து தேவசமுகத்தில் தாகத்தோடு கேட்கும்போது, கர்த்தர் நிச்சயமாகவே பரிசுத்த ஆவியைத் தந்தருளுவார்.
நினைவிற்கு:- “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்” (ஏசாயா 44:3).