No products in the cart.
அக்டோபர் 14 – விசுவாசமும், ஞானஸ்நானமும்!
“விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்” (மாற்கு 16:16).
ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுவதற்கு விசுவாசம் தேவை. நீங்கள் ஏன் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும்? உலகத்தில் ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்தபோதிலும், கிறிஸ்தவ மார்க்கத்திற்கு என ஒரு மேன்மை உண்டு.
இயேசுகிறிஸ்து நமக்காக பூமியிலே இறங்கி வந்தார். நமக்காக ஜீவனைக் கொடுத்தார், நமக்காக அடக்கம் பண்ணப்பட்டு மீண்டும் உயிரோடு எழுந்தார். இதை நாம் ஞானஸ்நானத்திலே விசுவாச அறிக்கையாக சொல்லுகிறோம்.
ஞானஸ்நானம் பெற தண்ணீரில் நிற்கிற ஒரு நிமிட நேரம் ‘கிறிஸ்து எனக்காக மரித்தார்’ என்றுச் சொல்லி பயபக்தியோடு சிலுவையை நோக்கிப் பார்க்கிறோம். அடுத்த நிமிடம் தண்ணீரில் மூழ்குவது ‘கிறிஸ்து எனக்காக அடக்கம் பண்ணப்பட்டார்’ என்பதற்கு அடையாளம். அப்பொழுது நாம் கிறிஸ்துவின் மரணத்தோடு நம்மை இணைத்துக் கொள்ளுகிறோம்.
பின்பு தண்ணீரிலிருந்து எழும்பும்போது ‘கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தார்’ என்பதை அறிக்கையிடுகிறோம். அந்தப்படியே, நாம் விசுவாசத்தினாலே ஞானஸ்நானத்தின் மூலமாக ‘கிறிஸ்து எனக்காக மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், உயிரோடு எழுந்தார்’ என்று தைரியமாய் சாட்சி கொடுக்கிறோம்.
தேவபிள்ளைகளே, விசுவாசத்தினாலே ஞானஸ்நானத்தின் மூலமாக ஒரு அடக்க ஆராதனைக்குள் செல்லுகிறீர்கள். பழைய ஆதாமின் சுபாவங்களை அடக்கம் செய்கிறீர்கள். பழைய கோபங்கள், பழைய எரிச்சல்கள், பழைய இச்சைகள் யாவும் ஒழிந்து போகவேண்டுமென்றால், அதைக் கொண்டுபோய் அடக்கம் பண்ணவேண்டியது அவசியமாகும். பழைய பாவ மனுஷனை அடக்கம் பண்ணாமல் எத்தனை நாள் பாவத்தோடு அழிந்து கொண்டிருப்பது? அப்படி அடக்கம் பண்ணுவதுதான் ஞானஸ்நானம் என்பதாகும்.
அப். பவுல் சொல்லுகிறார், “நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்” (ரோமர் 6:4,5).
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவனே இரட்சிக்கப்படுவான் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே, உங்களுக்கு விசுவாசம் தேவை. கிறிஸ்து எனக்காக மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், உயிரோடு எழுந்தார் என்று சொல்லுவதற்கு விசுவாசம் தேவை. அவரோடே அடக்கம் பண்ணப்படுவதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுவதற்கும், அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையினால் ஜீவிக்கவும் உங்களுக்கு விசுவாசம் தேவை.
வேதம் சொல்லுகிறது, “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17). தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாயிருங்கள்.
நினைவிற்கு:- “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே” (கலா. 3:27).