No products in the cart.
அக்டோபர் 13 – விசுவாசமும், இரட்சிப்பும்!
“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபே. 2:8).
கிறிஸ்தவ மார்க்கத்தின் ஆரம்பமே இரட்சிப்பாகத்தான் இருக்கிறது. இரட்சிப்பை எப்படி பெற்றுக்கொள்ளுவது? விசுவாசத்தின் மூலமாகத்தான் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.
நீங்கள் எதை விசுவாசிக்க வேண்டும்? “…இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:7,9) என்பதை விசுவாசிக்க வேண்டும்.
சிலுவையை நோக்கிப் பார்த்து, “இயேசுவே நீர் எனக்காக இந்த பூமியில் இறங்கி வந்தீர் என்று விசுவாசிக்கிறேன். என்னுடைய பாவங்களுக்காக நீர் சிலுவையில் அறையப்பட்டீர் என்பதையும், என் அக்கிரமங்களுக்காக நொறுக்கப்பட்டீர் என்பதையும் விசுவாசிக்கிறேன். உம்முடைய இரத்தமே என்னுடைய பாவங்களைக் கழுவக்கூடியது என்று விசுவாசிக்கிறேன். நீர் எனக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிரோடு எழுந்தீர் என்று விசுவாசிக்கிறேன்” என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்யும்போது, நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்.
வேதம் சொல்லுகிறது, “இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோமர் 10:8,9).
இரட்சிப்பிலே இரண்டு பெரிய சக்திகள் ஒன்றையொன்று வல்லமையாகச் சந்தித்துக்கொள்ளுகின்றன. ஒன்று மனிதனின் விசுவாசம், மற்றது கிறிஸ்துவின் கிருபை. மேகங்களின்மேல் குளிர்ந்த காற்று படும்போது அது அருமையான மழையாக பொழிவதுபோல, விசுவாசத்தின்மேல் தேவனுடைய கிருபை படும்போது அருமையான இரட்சிப்பு கிடைக்கிறது. ஆகவேதான் கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் (எபேசி. 2:8) என்று வேதம் சொல்லுகிறது.
இந்த விசுவாசமானது, உங்களுடைய இரட்சிப்புக்கு மாத்திரமல்ல, உங்களுடைய குடும்பத்தின் இரட்சிப்புக்கும் அத்தியாவசியமானது. ஆகவே நீங்கள் இரட்சிக்கப்படுவதோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து அந்த விசுவாசத்தை செயல்படுத்தி, உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும் இரட்சிப்பிற்குள் கொண்டு வந்துவிடுங்கள்.
ஒரு வீட்டில் ஒருவர் இரட்சிக்கப்பட்டு இருந்தால்கூட அதன் காரணமாகவும், இரட்சிக்கப்பட்டவரின் விசுவாசத்தின் காரணமாகவும், கர்த்தர் அந்தக் குடும்பத்திலுள்ள அத்தனைபேரையும் இரட்சிப்பார். நீதிமானாகிய நோவாவின் நிமித்தம் அவருடைய முழு குடும்பமும் இரட்சிப்பின் பேழைக்குள் பாதுகாக்கப்பட வில்லையா? தேவபிள்ளைகளே, நீங்கள் விசுவாசித்தால் உங்கள் இரட்சிப்பு உங்கள் குடும்பத்தினருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுவீர்கள். உங்கள் முழுக்குடும்பமும் இரட்சிப்பின் பேழைக்குள் பாதுகாக்கப்படட்டும்.
நினைவிற்கு:- “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” (ரோமர் 10:11).