No products in the cart.
அக்டோபர் 12 – ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்!
“ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே” (மத். 6:13).
கர்த்தருடைய ஜெபத்தின் கடைசி பகுதி கர்த்தரைத் துதிக்கும் துதியாயிருக்கிறது. உலக தோற்றத்திற்கு முன்பாக பெரிய ஆராதனை இருந்தது. இனிவரும் நித்தியமும் ஆராதனைகளினால் நிரம்பி இருக்கும்.
பூமியிலே கர்த்தருடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்டவர்களாகிய நீங்களும்கூட எப்பொழுதும் கர்த்தருக்காக நன்மை செய்து, அவருக்குத் துதியையும், கனத்தையும், மகிமையையும் செலுத்தக்கடவீர்கள். ராஜ்யம் அவருடையது, வல்லமையும் அவருடையது, மகிமையும் அவருடையது. அவருக்கே வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது (மத். 28:18).
நீங்கள் எதைச் செய்தாலும் தேவ மகிமைக்காகவே செய்யுங்கள். ஏரோது தனக்கு சுய மகிமையை தேடினதினாலே, தேவ தூதனால் அடிக்கப்பட்டு புழு புழுத்து இறந்தான் அல்லவா? ஆகவே எதைச் செய்தாலும், தேவ பிரசன்னத்தில் அதைச் செய்து இயேசு கிறிஸ்துவை எப்பொழுதும் ஸ்தோத்திரியுங்கள்.
அவரே ராஜாதி ராஜா. அவரே கர்த்தாதி கர்த்தா. அவரே அல்பா, அவரே ஓமெகா, அவர் முந்தினவரும் பிந்தினவரும் உயிருள்ளவருமாயிருக்கிறார். மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறார் (வெளி. 1:11,17,18).
வேதாகமத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தேவ வல்லமை நிரம்பியிருக்கிறதை நாம் வாசிக்கும்போது நமக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. சுகமளிக்கிற வல்லமை, அற்புதங்களைச் செய்கிற வல்லமை, பாவங்களை மன்னிக்கிற வல்லமை, மரித்தோரை உயிர்ப்பிக்கிற வல்லமை என அனைத்து வல்லமைகளும் ஆண்டவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. வல்லமை தேவனுடையதே!
கர்த்தர் தம்முடைய வல்லமையையும், அதிகாரங்களையும் அவருடைய நாமம் மகிமைப்படுவதற்காகவே உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவருடைய நாமத்தினாலே நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாய், வெற்றியுள்ளவர்களாய் ஆளுகை செய்ய வேண்டுமென்பதுதான் அவருடைய நோக்கமாய் இருக்கிறது.
பிசாசின் தலையை நசுக்கின அவர், சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ள அதிகாரத்தையும், வல்லமையையும் உங்களுக்குத் தந்திருக்கிறார். அந்த வல்லமையை செயல்படுத்தும் பொழுது அற்புதங்கள் நடக்கின்றன. தேவ நாமம் மகிமைப்படுகிறது.
கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தபொழுது தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்தி, “நான் சர்வ வல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு” என்றார் (ஆதி. 17:1).
தேவபிள்ளைகளே, சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களுக்கு முன் செல்லுகிறபடியினால், நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டிய அவசியமேயில்லை. அவருக்கு கனத்தையும், மகிமையையும் செலுத்தி, நீங்கள் வெற்றி நடைபோட முடியும். அவர் உங்களுக்கு முன்பாக நடக்கும்பொழுது யார் உங்களுக்கு எதிராக நிற்க முடியும்?
நினைவிற்கு:- “தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே” (சங். 62:11).