No products in the cart.
அக்டோபர் 11 – சுத்தமும், வெண்மையும்!
“அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்” (தானி. 12:10).
கர்த்தருடைய வருகை சமீபமாய் இருக்கிறதினாலே, கர்த்தர் தம்முடைய ஜனத்தை புடமிட்டு அவர்களை சுத்தமும் வெண்மையுமாக்கிக் கொண்டிருக்கிறார். பரிசுத்தாவியின் அபிஷேகத்தினால் நிரப்பி, அவர்களைக் கழுவிக் கொண்டிருக்கிறார். இது மணவாட்டியை தேவன் மறுரூபமாக்குகிற நேரம். வேதம் சொல்லுகிறது, “காலம் சமீபமாயிருக்கிறது… நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி. 22:10,11).
உங்கள் வாழ்க்கையின் நோக்கமெல்லாம் பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தமடைந்து கர்த்தருடைய வருகையிலே காணப்பட வேண்டும் என்பதாகவே இருக்கட்டும். எவ்வளவோ பிரசங்கங்களைக் கேட்டும், தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியத்தை அனுபவித்தும், வருகையிலே கைவிடப்படுவது என்பது மிக வேதனையான ஒரு காரியமாய் இருக்கும் அல்லவா?
நீங்கள் பரிசுத்தத்தைப் பெறுவதற்கு உங்கள் ஜெப ஜீவியத்தை, வேத வாசிப்பைச் சீர்தூக்கிப்பாருங்கள். எந்த சூழ்நிலையிலும் ஜெப ஜீவியத்தை விட்டுவிடாதேயுங்கள். ஆழமான ஜெப ஜீவியமே பரிசுத்த ஆவியின் வல்லமையை, பூரண பரிசுத்தத்தை உங்களுக்குள் கொண்டு வரும்.
எந்தக் காரியத்திலும் கர்த்தர் ஒருவரையே பிரியப்படுத்த தீர்மானியுங்கள். நான் இந்த வார்த்தைகளைப் பேசினால் அது கர்த்தருக்குப் பிரியமாய் இருக்குமா, நான் இந்த இடத்திற்கு சென்றால் கர்த்தர் என்னோடுகூட வருவாரா, நான் செய்கிற காரியங்களிளெல்லாம் கர்த்தருடைய கரம் என்னை வழிநடத்துமா, என்பதையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். கர்த்தருக்குப் பிரியமில்லாத காரியங்களை வெறுத்து ஒதுக்குங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்தத்தில் முன்னேறிச் செல்லுவீர்கள்.
எல்லாவற்றிலும் கர்த்தருக்கு முதலிடம் கொடுங்கள். கர்த்தரை முன் வைத்து ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு செயலையும் செயல்படுத்துங்கள். நீங்கள் கர்த்தருக்கு முதலிடம் கொடுத்து, அவருடைய சித்தத்தை நிறைவேற்றும்போது, உங்களுடைய வாழ்க்கையில் எந்த வீழ்ச்சியும் வருவதில்லை. அதே நேரத்தில் கர்த்தரை விட்டுவிட்டு உங்களுடைய சுயஞானம் மற்றும் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானங்களை நிறைவேற்றும்போது, அது உங்களுடைய பரிசுத்தத்திற்குத் தடையாகவும், களங்கமாகவும் அமையும்.
நீங்கள் பரிசுத்தத்திலே முன்னேற வேண்டுமென்றால், கர்த்தருக்கு உங்களை முழுமையாய் ஒப்புக்கொடுத்துக் கீழ்ப்படியுங்கள். அவருடைய தெளிவான வழிநடத்துதலை ஒருபோதும் அசட்டை செய்யாதிருங்கள். கர்த்தர் எந்த பாதையிலே நடத்த சித்தமானாரோ, அந்தப் பாதையிலே ஸ்தோத்திரத்தோடும், மகிழ்ச்சியோடும் முன்னேறிச் செல்லுங்கள்.
தேவபிள்ளைகளே, எப்போதும், எல்லாவற்றிலும் பயபக்தியாய் இருங்கள். கர்த்தருக்குப் பயப்படுங்கள். துணிகரமான பாவங்களுக்குள் செல்லாமல், பரிசுத்தத்தில் முன்னேறிச் செல்லுங்கள்.
நினைவிற்கு:- “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே” (1 பேதுரு 1:16).