AppamAppam - Tamil

அக்டோபர் 10 – நெகேமியாவும், எதிர்ப்பும்!

“இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன்” (நெகே. 1:11).

கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்கள் செய்ய வேண்டுமென்று முயற்சிக்கும்போது, நீங்கள் எதிர்ப்பையும், தடைகளையும் சந்திப்பீர்கள். ஒருவேளை உங்களுடைய ஊழியத்திலே தடையே இல்லை என்றால், உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். தடையேயில்லாத ஊழியம் பிரயோஜனமற்ற ஊழியமாய் இருக்கக்கூடும்! உண்மையான ஊழியத்திற்கு விரோதமாக சாத்தான் எழும்பி கிரியை செய்துகொண்டேதான் இருப்பான்.

நெகேமியா பக்தி வைராக்கியங்கொண்டு கர்த்தருக்கென்று ஆலயத்தையும், எருசலேமின் மதில் சுவர்களையும் கட்ட ஆரம்பித்தபோது, அவருக்கு ஏராளமான எதிர்ப்புகள் இருந்தன; சத்துரு மூர்க்கமாய் போராடினான். நெகேமியாவுக்கு விரோதமாக சன்பல்லாத், தொபியா என்பவர்கள் எழும்பினார்கள். வேதம் சொல்லுகிறது, “இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது” (நெகே. 2:10).

ஆனால், அதே நேரத்தில், கர்த்தர் அவருக்குத் துணை நின்றார். அவரோடு இணைந்து நிற்க ஜனங்களுடைய உள்ளத்தில் ஏவுதலைக் கொடுத்தார். தேவனுடைய ஜனங்களும் கர்த்தருடைய ஊழியத்திற்கு தியாகமாய்க் கொடுக்கவும், தங்களை அர்ப்பணித்து கடமைகளை நிறைவேற்றவும் ஆவலுள்ளவர்களாய் இருந்தார்கள்.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய இராஜ்யம் பூமியிலே விரிவடைவதற்கு நீங்கள் எந்தத் தியாகமும் செய்ய ஆயத்தமாய் இருக்கவேண்டும். எழுப்புதலுக்காக எந்தக் கிரயத்தையும் செலுத்தத் தீர்மானிக்கும்போது, நிச்சயமாகவே உங்களுடைய ஊழியத்தில் பெரிய பலனைக் கர்த்தர் கட்டளையிடுவார். ஆகவே உங்களுடைய முயற்சியிலே சோர்ந்துபோய் விடாதேயுங்கள்.

எந்த ஒரு மனுஷன் ஆத்தும இரட்சிப்பிற்காகப் பாடுபடுகிறானோ, அவன் சாத்தானுடைய தாக்குதலுக்கு இலக்காகிறான். நீங்கள் கர்த்தருக்காக எந்த முயற்சியையாவது ஆரம்பிக்கும்போது கர்த்தருடைய எதிரிகள் உங்களை கேலியும் பரியாசமும் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து “நீ ஊழியம் செய்து உலகம் திருந்தவா போகிறது? எத்தனை ஊழியக்காரர்கள் விழுந்திருக்கிறார்கள். நீயும் விழுந்துபோவாய்” என்றெல்லாம் பரியாசம் செய்யக்கூடும்.

நெகேமியாவின் விரோதிகள் தங்களுடைய கேலிப்பரியாசங்களினால் அவனை சோர்ந்து போகப் பண்ணினார்கள். “அம்மோனியனாகிய தொபியா அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்து போகும் என்றான்” (நெகே. 4:3).

தன்னைப் பரியாசம் செய்தபோது, நெகேமியா செய்தது என்ன தெரியுமா? எழும்புகின்ற எல்லா பரியாசங்களையும், நிந்தைகளையும், தடைகளையும், போராட்டங்களையும் எதிர்த்து ஜெபிக்கத் தீர்மானித்தார். தேவபிள்ளைகளே, நீங்களும் அவ்விதமாய் ஜெபிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நினைவிற்கு:- “என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்” (நெகே. 13:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.