No products in the cart.
அக்டோபர் 06 – மேய்ப்பனும், ஆடுகளும்!
“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” (சங்.23:1).
கர்த்தருக்கும், உங்களுக்கும் இடையிலுள்ள மென்மையான உறவு என்ன? அவர் உங்களுடைய மேய்ப்பன், நீங்கள் அவருடைய ஆடுகள். என் மேய்ப்பன் என்று உரிமையோடும், அன்போடும் சொல்லும்படி அவர் நல்ல மேய்ப்பனாயிருக்கிறார். மேய்ப்பன் தன் ஆடுகளை வழிநடத்திச் செல்லுகிறான், போஷிக்கிறான், நல்ல தண்ணீரைக் கொடுக்கிறான், புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறான். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆபத்து நேரங்களில் தன் உயிரைக் கொடுத்தாகிலும் தன் ஆடுகளைப் பாதுகாக்கிறான்.
நீங்கள் ஆண்டவருடைய ஆடுகளாய் இருக்கிறதினால் அவரைப் பார்த்து, “ஆண்டவரே, நான் உம்மை மீறி ஓடிவிடமாட்டேன். நானாக பல வழிகளைத் தேடமாட்டேன். நான் உம்மையே பின்பற்றி வருவேன். நீர் நடத்துகிற புல்வெளியிலே மேய்ச்சலைக் கண்டடைவேன். ஆகவே என் சித்தத்தை மேய்ப்பனாகிய உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்து, உம்முடைய வழிகளை எல்லாம் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறேன்” என்று சொல்லுங்கள்.
ஒரு முறை ஒருவன், “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்” என்ற தலைப்பில், சங்கீதம் 23-ஐ ஆழமான நாடகமாய் நடித்துக் காண்பித்தான். ஆடுகளைப் போலவே சத்தமிட்டான். மேய்ப்பனைப் போலவே நடந்து காட்டினான். ஜனங்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள்.
அப்பொழுது, அங்கே ஒரு வயதான போதகர் வந்து, அந்த நடிகனுடைய அனுமதியோடு 23-ம் சங்கீதத்தை உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றியோடு வாசித்தார். அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் தேவ ஆவியானவரால் தொடப்பட்டார்கள். கூடியிருந்த அத்தனைபேருமே தேவனுடைய அன்பை உணர்ந்து கொண்டார்கள்.
முடிவாக, அந்த நடிகன் அவரிடம் “ஐயா, இந்த சங்கீதத்தை நான் கஷ்டப்பட்டு நடித்து மக்களுக்குப் புரிய வைத்தேன். ஆனால் நீங்கள் நின்றுகொண்டு அமைதியாய் அதை வாசித்து ஜனங்களை மனதுருகும்படி செய்துவிட்டீர்களே, இதன் இரகசியம் என்ன?” என்று கேட்டான். அதற்கு அந்தப் போதகர் சொன்னார், “நண்பனே, உனக்கு மேய்ப்பனின் சங்கீதம் மட்டும்தான் தெரியும். ஆனால் எனக்கோ, அந்த மேய்ப்பனையே தெரியும். அவர் எப்போதும் என்னோடிருக்கிற மேய்ப்பன்” என்றார்.
நீங்கள் விரும்பும் வகையில் ஆயிரம் வழிகள் உங்கள் முன்னே இருக்கலாம். ஆனால் அவற்றைத் தவிர்த்துவிட்டு அருமை இரட்சகராகிய ஆண்டவரை, வழிநடத்துகின்ற மேய்ப்பனாக உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் என்று மார்தட்டி மகிழ்ந்தால் எத்தனை சந்தோஷமாய் இருக்கும்! அது எத்தனை உரிமையுள்ள சிலாக்கியம்! கர்த்தர் உங்கள் மேய்ப்பனாயிருப்பாரென்றால், நீங்கள் தாழ்ச்சியடைவதே இல்லை. குறைவுபட்டுப் போவதே இல்லை. அவரே உங்களை கடைசிவரை வழிநடத்தும் உத்தமமான மேய்ப்பர்.
நினைவிற்கு:- “இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப் போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம் பண்ணுகிறவரே, பிரகாசியும்” (சங். 80:1).