No products in the cart.
அக்டோபர் 05 – துவக்கமும், முடிவும்!
“உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்” (யோபு 8:7).
ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் முடிவே முக்கியமானது. ஒன்றைச் செய்யும்போது, உங்களுடைய துவக்கம் சரியாயிருந்தால் முடிவு சிறப்பாயிருக்கும். கர்த்தரோடு, துவக்கத்தை ஆரம்பித்தால் முடிவு மகிமையானதாய் இருக்கும்.
டி.எல். மூடி என்ற பிரசித்தி பெற்ற பக்தனுடைய ஊழியத்தின் துவக்கம் என்ன தெரியுமா? ஞாயிறு ஓய்வுநாள் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு வருவதே அவருடைய ஊழியத்தின் ஆரம்பமாய் இருந்தது. சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பணி அல்ல; சின்ன பிள்ளைகளை தோள்மேல் தூக்கிக்கொண்டு வந்து ஓய்வுநாள் பள்ளியில் விடும் வேலை. இந்த சிறு பணியில் அவர் உண்மையாய் இருந்ததினாலே, முடிவில் கர்த்தர் அவரை உலகப்பிரசித்தி பெற்ற ஊழியராய் உயர்த்தினார்.
இன்றைக்கு நீங்கள்கூட கர்த்தருக்காக ஏதாகிலும் ஒரு புதிய காரியத்தை செய்யத் துவங்குங்கள். அது ஜெப ஊழியமானாலும் சரி, பாடல் ஊழியமானாலும் சரி, கைப்பிரதிகளை விநியோகிக்கும் ஊழியமானாலும் சரி, ஆஸ்பத்திரிக்குச் சென்று வியாதியஸ்தர்களை சந்திக்கும் ஊழியமானாலும் சரி ஏதாகிலும் ஒன்றை கர்த்தருக்காக ஆரம்பித்து அதை உத்தமமாகச் செய்யுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே அதில் உங்களை உயர்த்துவார்.
வேதத்தில் செருபாபேல் என்ற பக்தனைக் குறித்து எழுதியிருக்கிறது. கர்த்தருக்காக ஆலயத்தைக் கட்டும்படி அவர் ஒரு ஆரம்பத்தை மேற்கொண்டார். வீடு கட்டுகிறவர்கள் கையில் வைத்திருக்கிற தூக்கு நூலைக்கொண்டு ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டார். அந்த ஆரம்பத்தை கர்த்தருடைய கண்கள் கண்டன.
வேதம் சொல்லுகிறது, “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்கு நூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது” (சகரி. 4:10).
நீங்கள் எளிமையாய் ஆரம்பித்தாலும், கர்த்தரோடுகூட ஆரம்பிக்கிறபடியால் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை வளர்ந்து கொண்டேபோகும். உள்ளான மனுஷனிலும் பெலன்கொண்டவர்களாய் விளங்குவீர்கள். வேதம் சொல்லுகிறது, “நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்” (யோபு 17:9).
தாவீதைப் பாருங்கள். அவர் ஆடுகளை மேய்க்கும் வேலையை செய்தார். அது ஒரு மிகச்சாதாரண ஆரம்பம்தான். ஆனால் அதில் அவர் உண்மையுள்ளவராயிருந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் என்று பாடி சங்கீதங்களை இயற்றினார். அவருடைய முடிவு எவ்வளவு அருமையாய் இருந்தது! வேதம் சொல்லுகிறது, “அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்” (சங். 84:7).
தேவபிள்ளைகளே, நீங்களும் உண்மையாயிருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் மென்மேலும் உயருவீர்கள்.
நினைவிற்கு:- “நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப் போல் வளருவான்” (சங். 92:12).