No products in the cart.
அக்டோபர் 04 – ஆசீர்வாதமும், சாபமும்!
“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன்” (உபா. 30:19).
உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமானதாய் இருக்கிறதா அல்லது சாபத்தின் பிடியிலே சிக்கித் தவிக்கிறதா? ஒரு விசை உங்களை ஆராய்ந்து பாருங்கள். அநேகருடைய வாழ்க்கை தீர்க்க முடியாத சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிறது.
சில வீடுகளிலே துதியின் சத்தமும், ஆசீர்வாதமும், மன நிறைவும் தங்கியிருக்கிறதை நாம் காணலாம். ஆனால் சில வீடுகளிலே இருளின் ஆதிக்கங்கள் சூழ்ந்து கொண்டு, வீடெங்கும் நோயும், சாத்தானின் போராட்டமும் நிறைந்ததாய் இருக்கக் காணலாம். இந்த சாபங்களை மாற்றுவது எப்படி?
வேதத்தில் சாபத்தைப் பற்றி ஆதி. 3:14-19-ல் காணும் பகுதியில் வாசிக்கலாம். ஆதாம் கீழ்ப்படியாமல் போனபோது கர்த்தருடைய உள்ளம் உடைந்தது. மனுஷன் தேவனுக்கு செவிகொடாமல், சர்ப்பத்திற்கு செவிகொடுத்ததினாலே, கர்த்தர் வேதனையுடன் மனுக்குலத்தையும் உலகத்தையுமே சபித்தார். இதன் நிமித்தம் மனுஷன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுபட வேண்டியதாயிற்று. ஸ்திரீகள் வேதனையோடு பிள்ளை பெற வேண்டியதாயிற்று. சபிக்கப்பட்ட இந்த பூமியானது, முள்ளையும் குருக்கையும் முளைப்பித்தது.
வேதத்தின் முதலாம் புத்தகமான ஆதியாகமத்தில் துவங்கிய இந்த சாபம் கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் தொடர்ந்தது. ஆனால் “இனி ஒரு சாபமுமிராது” என்று வெளிப்படுத்தல் 22:3 சொல்லுகிறது. தேவனுடைய பிள்ளைகள் ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றால் முதலாவது சாபத்தை உங்களை விட்டு அகற்ற வேண்டும். சாபத்தின் காரணம் என்ன என்று ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் சாபத்தோடு தவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து அதற்குப் பரிகாரம் செய்யும் போது, கர்த்தர் சாபத்தின் வல்லமையிலிருந்து உங்களுக்கு நிச்சயமாய் விடுதலையைத் தருவார்.
இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர்தான் சாபத்தின் வல்லமையிலிருந்து நமக்கு விடுதலை தர, நம்மேல் வரவேண்டிய சாபத்தைத் தன்மேல் சுமந்து கொண்டார். நமக்காக அவர் சாபமானார். வேதம் சொல்லுகிறது, “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்” (கலாத். 3:13).
உங்களுக்காக சாபமான கிறிஸ்துவைத் துதியோடு நோக்கிப் பார்ப்பீர்களாக. சபிக்கப்பட்ட சிலுவை மரத்திலே உங்களுக்காக அவர் தொங்கி சாபத்தை ஏற்றுக் கொண்டார். சபிக்கப்பட்ட முள்ளினால் உண்டான கிரீடத்தைத் தலையிலே சூட்டி, சாபத்தின் பிடியிலிருந்து உங்களை விடுவிக்க சித்தமானார்.
அநேகர், இயேசுகிறிஸ்து சிலுவையிலே நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் நம்முடைய சாபங்களையும் சிலுவையில் சுமந்து தீர்த்திருக்கிறார் என்பதை உணருவதில்லை. தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களில் அன்புகூருகிறதினால், உங்கள் சாபங்களையும் ஆசீர்வாதங்களாக மாற்றுகிறார்.
நினைவிற்கு:- “இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்” (வெளி. 22:3).