No products in the cart.
அக்டோபர் 03 – அப்பமும், தண்ணீரும்!
“அவர் உன் அப்பத்தையும், உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” (யாத். 23:25).
கர்த்தர் உங்களோடு செய்திருக்கும் ஆசீர்வாதத்தின் உடன்படிக்கைகள் எத்தனை அருமையானவை! அவர் உங்களுடைய ஆசீர்வாதத்தின் ஊற்றாயிருக்கிறார். தம்முடைய ஜனத்தை ஆசீர்வதிப்பதில் அவர் அக்கறையுள்ளவரும், வாஞ்சையுள்ளவரும், ஆர்வமுள்ளவருமாயிருக்கிறார்.
கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்திலே வழி நடத்திக்கொண்டு வந்தபோது, அவர்களுக்கு அப்பமாக வானத்திலிருந்து மன்னாவைப் பொழியும்படிச் செய்தார். ஒவ்வொருவருக்கும் தேவையான மன்னாவாய் அது அமைந்தது. அந்த அப்பத்தை அவர் ஆசீர்வதித்தபடியினாலே இஸ்ரவேல் ஜனங்களுக்குள்ளே பெலவீனமானவன் ஒருவனும் இருக்கவில்லை.
எலியா, கேரீத் ஆற்றங்கரையிலே ஒளிந்து இருந்தபோது, அவனுக்கு அப்பம் கிடைக்கும்படி கர்த்தர் காகங்களுக்குக் கட்டளையிட்டார். காகமானது ஒவ்வொருநாளும் அவனுக்கு அப்பத்தைக் கொண்டு வந்தது. அவன் ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். அந்த ஆறு வற்றினபோது அவனுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்கும்படி கர்த்தர் சாறிபாத் விதவையை எழுப்பினார். அந்தத் தேவன் உங்கள்மேலும் அதிக அக்கறை உள்ளவராயிருக்கிறார் என்பதை மறந்து போகாதேயுங்கள். “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்” (மத். 6:31).
இயேசு பூமியில் இருந்த நாட்களில் அவர் ஒரு முறை அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்தார். ஆசீர்வதிக்கப்பட்ட அந்த அப்பமானது ஐயாயிரம் பேரைப் போஷிக்க போதுமானதாக இருந்தது. அவரே, உங்களுடைய ஆசீர்வாத அப்பமானவர். அப்பம் என்ற வார்த்தைக்கு புதிய ஏற்பாட்டில் ஆழமான, மேன்மையான அர்த்தம் உண்டு. இயேசு தம்மைக் குறித்து ஜீவ அப்பம் நானே என்றார் (யோவான் 6:35).
கர்த்தர் உங்களுடைய அப்பத்தை ஆசீர்வதிக்கிறது மட்டுமல்ல, தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்களின் தண்ணீரை அவர் ஆசீர்வதித்தார். இஸ்ரவேல் ஜனங்களின் நாட்களில் இருந்த தண்ணீரோ மிகவும் சுத்தமானதாய் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் மாராவுக்கு வந்தபோது அந்த மாராவின் கசப்பான தண்ணீரைக் கர்த்தர் மதுரமாக்கிக் கொடுத்தார்.
கன்மலையின் தண்ணீரினால் அவர்களுடைய தாகத்தைத் தீர்த்தார். எரிகோ பட்டணத்தின் தண்ணீர் கெட்டதாயிருந்தபோது எலிசாவின் மூலமாக கர்த்தர் அற்புதத்தைச் செய்து, அந்தத் தண்ணீரை ஆரோக்கியமானதாக மாற்றினார்.
கர்த்தர் தரும் தண்ணீர் எவ்வளவு மேன்மையானது என்பதைப் பாருங்கள். வேதம் சொல்லுகிறது, “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” (யோவான் 4:14). கர்த்தர் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிக்கிறவர். ஜெபியுங்கள். உங்கள் வீட்டிலுள்ள அப்பமும், தண்ணீரும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கட்டும்.
நினைவிற்கு:- “கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுவார். வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” (சங். 115:14,15).