No products in the cart.
செப்டம்பர் 29 – சொந்த ஜெப ஜீவியம்!
“என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை” (உன். 1:6).
‘என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை’ என்பது எத்தனைத் துயரமான வார்த்தை! உங்களுடைய ஜெபஜீவியத்தை சரிப்படுத்த வேண்டியது உங்களுடைய முதலாவது கடமை. தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் ஜெபிக்கிறவராக இல்லாவிட்டால் ஆலயத்தில் ஜெபிப்பதும், பொதுமக்கள் முன்னால் ஜெபிப்பதும் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்காது. உங்களுடைய சொந்த ஜெப ஜீவியத்தின் மூலமாகத்தான் உங்கள் ஆத்துமாவாகிய திராட்சத் தோட்டத்தைக் காக்க முடியும்.
கர்த்தர் ஆதாம், ஏவாளை ஏதேன் தோட்டத்திற்குக் கொண்டுவந்தபோது, அந்தத் தோட்டத்தை பண்படுத்தி காவல் காக்கும் வேலையை ஆதாமுக்குக் கொடுத்தார். அந்த வேலையை ஆதாம் உண்மையும், உத்தமமுமாய் செய்தாரா என்பது ஒரு கேள்வியே. அந்தத் தோட்டத்தை ஆதாம் அன்று நல்லமுறையில் காவல் காத்திருந்தால், சாத்தான் உள்ளே நுழைந்திருக்க முடியாது. ஆதாமும், ஏவாளும் சோதனைக்கு ஆளாக வேண்டியிருந்திருக்காது.
அந்தத் தோட்டத்தை சரிவர காவல் காக்காததினாலேயே, சாத்தான் தோட்டத்திற்குள் புகுந்தான். நன்மை தீமை அறியத்தக்க மரத்தில் ஏறிக்கொண்டான். ஏவாளை வஞ்சித்தான். முடிவில் உலகம் பாவத்திற்குள்ளும், சாபத்திற்குள்ளும் சென்றது. உங்களுடைய ஜெப ஜீவியமே திராட்சத்தோட்டமாகிய உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தையும் சாத்தானிடமிருந்து பாதுகாக்கக்கூடியது.
கிராம ஊழியம், தெருப் பிரசங்கம், துண்டுப் பிரதிகளை விநியோகித்தல் போன்ற எந்த ஊழியத்தைச் செய்தாலும், அது ஜெபமின்றி செய்யப்பட்டால், மழுங்கட்டைக் கோடாரியினால் மரம் வெட்டப் போவதைப் போலத்தான் அந்த ஊழியங்கள் அமையும்.
தேவபிள்ளைகளே, நீங்கள் அதிகாலை வேளையிலே கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து ஜெபிப்பீர்களென்றால், அந்த நாள் முழுவதும் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். நீங்கள் ஜெபிக்கத் தவறுவீர்களேயானால், உங்கள் சொந்த முயற்சியிலே அந்த நாளை கடக்க வேண்டியதாகி, முடிவில் தோல்வி அடைவீர்கள்.
ஒரு ஊழியர், தமது சபையைக் விரிவாக்குவதற்காக ஆத்துமாக்களைத் தேடி இரவும் பகலும் அலைந்தார். அவர் ஏராளமான வேதபாட வகுப்புகளை நடத்தினார். பிரசங்கங்களைச் செய்தார். ஆனால் தன்னுடைய சொந்தத் திராட்சத்தோட்டமாகிய ஜெப ஜீவியத்தை காத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் கர்த்தர், “மகனே, நீ முழங்காலிலே நின்று ஜெபித்தால் ஆத்துமாக்களைத் தேடி ஓட வேண்டியதில்லை. ஆத்துமாக்கள் உன்னுடைய ஆலயத்தின் வாசலிலே வந்து குவிவார்கள்” என்றார். அந்தப்படியே அவர் ஜெபிக்க ஆரம்பித்தார். கர்த்தர் அநேக ஆத்துமாக்களைச் சபையிலே கொண்டு வந்து சேர்த்தார்.
தேவபிள்ளைகளே, நீங்கள் ஆத்துமாவில் பலன்கொண்டிருக்க வேண்டுமானால், ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும். அப்போது உள்ளான மனுஷனிலே பெலன் கொள்ளுவீர்கள், ஆவியின் வரங்களும், வல்லமைகளும் உங்களை நிரப்பும். கர்த்தர் உங்களை வல்லமையாய்ப் பயன்படுத்துவார்.
நினைவிற்கு:- “நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்” (உன். 5:2).