No products in the cart.
செப்டம்பர் 27 – சேவல் கூவும் நேரத்தில்!
“அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்” (மாற்கு 13:35).
எல்லா ஜீவன்களும் தூங்கிக்கொண்டிருக்கும்போது, இந்தச் சேவல் மாத்திரம் முன்னதாகவே விழித்து, விடியப்போகிறது என்று முன்னறிந்து, “கொக்கரக்கோ” என்று கூவி, ஜனத்தைத் தட்டி எழுப்புகிறது. இந்தச் சேவலானது, இயேசு வரப்போகிறார் என்பதை, உறங்கிக்கிடக்கிற உலகத்தாருக்கு அறிவிக்கிற ஒரு தேவனுடைய பிள்ளைக்கு நிழலாட்டமாய் இருக்கிறது.
ஆம், எக்காள சத்தமாய்க் கூவி, ஜனத்தை கர்த்தருடைய மகிமையான வருகைக்காய் ஆயத்தப்படுத்துகிற ஆவிக்குரிய சேவல்கள் அவசியம் தேவை. பேதுரு இயேசுவை மறுதலித்த நாள் முதற்கொண்டு எப்பொழுதெல்லாம் சேவல் கூவுகிறதைக் கேட்டானோ, அப்பொழுதெல்லாம் இரண்டு காரியங்கள் அவனுடைய உள்ளத்திலே தொனித்திருந்திருக்கும்.
முதலாவது, “ஆண்டவரே, நான் உம்மை மறுதலித்த பாவி அல்லவா? உம்மை சபித்து சத்தியம் பண்ணினவன் அல்லவா? இனிமேலும் துரோகமான காரியத்திற்குள் நான் சென்றுவிடாதபடி காத்துக்கொள்ளும்” என்று சொல்லி தன்னைத் தாழ்த்தி ஜெபித்திருந்திருப்பான். மறுபக்கத்திலே சேவல் கூவும்போது, “சேவல் கூவுகிறதே ஆண்டவரே, எக்காள சத்தம் உம்முடைய வருகையை எப்பொழுது அறிவிக்கும்? நான் உம்முடைய வருகையிலே உம்மை சந்திக்க வேண்டுமே, நீர் சீக்கிரமாய் வரப்போவதால் உமக்கு ஸ்தோத்திரம்” என்று ஸ்தோத்தரித்திருந்திருப்பான்.
வருகை சமீபித்திருக்கிற இந்த நாட்களில், நீங்கள் ஆத்துமாக்களுக்காய் ஜெபிக்கிறவர்களாய், பாவத்திற்கு விரோதமாக குரல் எழுப்புகிறவர்களாய் இருப்பதோடல்லாமல், கர்த்தருடைய வருகையைக் குறித்து அறிவிக்கிறவர்களாயும் இருக்க வேண்டும். கர்த்தர் வருகிற நாளையும், நாழிகையையும் அறியாவிட்டாலும், கிறிஸ்துவினுடைய வருகையின் அடையாளங்கள் எங்கும் தோன்றுகிறதைக் காணலாம். தேவனுடைய தீர்க்கதரிசனங்களெல்லாம் நிறைவேறுகிறதைக் காணலாம். குரல் கொடுக்காமல் உங்களால் சும்மா இருக்க முடியுமா?
வேதத்தில், கர்த்தருடைய இரண்டாம் வருகையைக் குறித்து முந்நூறு இடங்களுக்கு மேலாக எழுதப்பட்டிருக்கிறது. எல்லா அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய வருகையைக் குறித்து தம்முடைய நிருபங்களிலே எழுதினார்கள். வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெச. 4:16,17).
தேவபிள்ளைகளே, உங்களுடைய பாவங்கள், சாபங்கள் எல்லாவற்றையும் உங்களைவிட்டு அகற்றி, மற்றவர்களையும் அவ்வாறே கர்த்தருக்கென்று நீங்கள் ஆயத்தப்படுத்த உங்களை ஒப்புக்கொடுப்பீர்களாக. சேவலைப் போன்று அவருடைய வருகையை அறிவிக்கிற கர்த்தருடைய தூதனாக விளங்குவீர்களாக!
நினைவிற்கு:- “இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” (வெளி. 22:20).