AppamAppam - Tamil

செப்டம்பர் 26 – சேர்க்கிற கர்த்தர்!

“இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்” (அப். 2:47).

நம் கர்த்தர் சேர்க்கிற கர்த்தர். அவர் தகர்க்கிறவர் என்றும், சிதறடிக்கிறவர் என்றும் அநேகர் கர்த்தரைக் குறித்து தவறாக நினைக்கிறார்கள். ஆனால் கர்த்தரோ, தன்னுடைய ஜனத்தை நேசித்து, சேர்க்கிறவராகவே இருக்கிறார். ‘என்னிடத்தில் வருகிறவர்களை நான் புறம்பே தள்ளுவதில்லை’ என்பது அவருடைய வார்த்தை அல்லவா?

பல வேளைகளில் நீங்கள் கைவிடப்பட்டவர்களைப் போலக் காணப்படலாம். அப்போது, கர்த்தர் என்னை மறந்துவிட்டாரா, புறக்கணித்து விட்டாரா என்றெல்லாம் எண்ணத் தோன்றலாம். ஆனால் இமைப்பொழுது அவர் கைவிட்டாலும், அவர் உருக்கமான இரக்கங்களினால் சேர்த்துக் கொள்ளுகிறவராய் இருக்கிறார். நீங்கள் அவரை அறியாதவர்களாய் இருந்தபோதும்கூட, அவர் உங்களை அன்போடு தேடி வந்தார். அவருடைய சுதந்தரவாளிகளாகும்படி உங்களை சேர்த்துக் கொண்டார்.

ஒரு ஸ்திரீயைக் குறித்து அறிவேன். அவள் தன் கணவனுக்குச் செய்த துரோகத்தினால் வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டாள். அவமானமும், நிந்தையும் அடைந்தாள். எல்லாவற்றையும் இழந்துபோன பரிதாபமான சூழ்நிலைக்குள் வந்தாள். ஒரு நாள் அவள் சுவிசேஷத்தைக் கேட்க நேர்ந்தது. எந்த சூழ்நிலையிலும் தன்னை வெறுக்காதவரும், தள்ளாதவரும், சேர்த்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறவருமான இயேசு கிறிஸ்துவினுடைய அன்பு அவளுடைய உள்ளத்தைத் தொட்டது. இயேசுவுக்குத் தன் வாழ்க்கையை முற்றிலுமாய் ஒப்படைத்தாள். பின்பு ஜெபத்துடன் கணவனிடம் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதினாள். என்ன ஆச்சரியம்! கர்த்தர் அந்தக் குடும்பத்தை ஒன்றாய் இணைத்தார். கர்த்தர் சேர்க்கிறவர்.

வேதம் சொல்லுகிறது, “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்” (யாக். 4:8). “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” (எபி. 11:6). “துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார்” (சங். 147:2).

இந்த உலகத்தில் துரத்தப்பட்ட மக்கள் அநேகம்பேர் உண்டு. பிள்ளைகளால் துரத்தப்பட்டவர்கள், உறவினர்களால் துரத்தப்பட்டவர்கள், சமுதாயத்தினால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டவர்கள் என பலர் உண்டு. கர்த்தர் அவர்களை எல்லாம் சேர்த்துக் கொள்ள ஆவலாயிருக்கிறார்.

அன்று இஸ்ரவேலர் தங்கள் தேசத்திலிருந்துத் துரத்தி விடப்பட்டார்கள். ஆனால் கர்த்தரோ, அவர்களை மீண்டும் கூட்டிச் சேர்த்திருக்கிறார், சேர்த்துக்கொண்டு மிருக்கிறார். அவர்கள் காலூன்றி தங்கள் தேசத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். தேவபிள்ளைகளே, ஆவிக்குரிய இஸ்ரவேலாகிய உங்களையும் சேர்த்துக்கொள்ள கர்த்தர் ஆவலாயிருக்கிறார்.

நினைவிற்கு:- “அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப் போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்” (யோவான் 11:52).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.