No products in the cart.
செப்டம்பர் 25 – சேதப்படுத்துவதில்லை!
“பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை” (சங். 121:6).
கர்த்தர் அன்போடு கொடுக்கிற வாக்குத்தத்தங்களைத் தியானிக்க தியானிக்க நம்முடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்புகிறது. இரவும் பகலும் எவ்வளவாய் அவர் நம்மை பாதுகாக்கிறார்! வெயிலாகிலும், நிலவாகிலும் நம்மைச் சேதப்படுத்தி விடாதபடி உறங்காமலும், தூங்காமலும் எத்தனை ஜாக்கிரதையாக அவர் பாதுகாக்கிறார்!
இன்றைக்கு பூமியில் வெப்ப நிலை அதிகரித்து, ஜனங்கள் வேதனைக்குள்ளாயிருக்கிறார்கள். இன்னும் தேசத்திலே மரம், செடி, கொடிகள் அழிக்கப்படுமானால் புகை மண்டலம் பெருகி, உலகத்திற்கு பெரிய கேடுகள் வரக்கூடும். மேலும், வைத்தியத்தினால் கட்டுப்படுத்த முடியாத நோய்களும், மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத பெலவீனங்களும் மனுஷனைத் தாக்கி வருகிறதைக் காண்கிறோம். கர்த்தரே இந்தச் சூழ்நிலையிலிருந்து நம்மைக் காக்கக்கூடியவர்.
நம் தேவன் அண்டசராசரங்களையும் சிருஷ்டித்தவர். அவரே கோடிக்கணக்கான நட்சத்திரங்களை அதினதின் பாதையிலே செவ்வையாய் ஓட வைக்கிறவர். அவரே தம்முடைய பிள்ளைகளை அன்போடு பாதுகாத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறார்.
அதே நேரம் யார், யார் துன்மார்க்கமாய் நடந்து, கர்த்தருடைய வார்த்தைக்கு விலகி மனம்போல ஜீவிக்கிறார்களோ, அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடைப்பதில்லை. ‘தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப் போலவும் ஆக்குவேன்’ (லேவி. 26:18,19) என்று வேதம் சொல்லுகிறது.
பார்வோனும், அவனுடைய சேனைகளும் இஸ்ரவேல் ஜனங்களைத் தொடர்ந்து வந்தபோது, சிவந்த சமுத்திரத்தின் கரையிலே கர்த்தர் மேகஸ்தம்பங்களைக் கட்டளையிட்டார். “அது எகிப்தியரின் சேனையும், இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது. எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று” (யாத். 14:20).
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இரவும், பகலும் கண்மணிபோல பாதுகாக்கிறவர். பகலிலே வெயில் அவர்களை பாதித்துவிடக்கூடாது என்று கர்த்தர் மேகஸ்தம்பங்களை கட்டளையிட்டு, சூரிய வெப்பத்தை மட்டுப்படுத்தி, இஸ்ரவேலருக்கு குளுமையான சீதோஷ்ண நிலையைக் கொடுத்தார். இரவிலே நிலவு சேதப்படுத்தாதபடி கர்த்தர் அக்கினிஸ்தம்பங்களை கட்டளையிட்டு வானத்து பனியோ, குளிரோ, சந்திர ஒளியினால் வருகிற தீமையான கதிர்களோ அவர்களுக்கு தீங்கு செய்யாதபடி கண்மணிபோல பாதுகாத்தார்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய அடைக்கலத்திலே உங்களை நிலைநிறுத்திக் காத்துக் கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்” (சங். 91:4).
