No products in the cart.
செப்டம்பர் 24 – பெருகச் செய்கிறவர்!
“நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்” (2 கொரி.9:8).
கர்த்தர் உங்களிலே கிருபையைப் பெருகச்செய்ய வல்லவர். உங்களை உண்டாக்கின கர்த்தர், உங்களுக்காக புதுக் கிருபையை உருவாக்கி சிருஷ்டித்துத் தர வல்லமையுள்ளவராய் இருக்கிறார். நீங்கள் எல்லாவற்றிலும், எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாய் இருக்க வேண்டும் என்றும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாக இருக்க வேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகிறார்.
நீங்கள் சம்பூரணமாய் விளங்கும்படி கர்த்தர் சகலவிதக் கிருபைகளையும் உங்களில் பெருகச்செய்கிறார். சகலவிதக் கிருபை என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் நிற்பதற்கும் கிருபை தேவை. ஊழியம் செய்வதற்கும் கிருபை தேவை. கர்த்தருடைய சித்தத்திற்கு அர்ப்பணிப்பதற்கும் கிருபை தேவை. இப்படிப்பட்ட ஏராளமான கிருபைகளைப் பற்றி வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிறது.
அப். பேதுரு, “நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும்” (1 பேதுரு 5:12) என்று எழுதுகிறார். ஆம், விழுந்துபோனவர்களைக்கூட கர்த்தருடைய கிருபைதான் தூக்கி நிறுத்துகிறது. மீண்டும் விழாமல் நிற்கும்படி அந்தக் கிருபை பாதுகாக்கிறது. சில நல்ல ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள், இருபது வருடங்கள், முப்பது வருடங்கள் என்று வல்லமையாக ஊழியம் செய்கிற ஊழியக்காரர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஊழியத்தையும் அழைப்பையும் காத்துக்கொள்ளுகிறதின் இரகசியம் என்ன தெரியுமா? தங்களை நிலைகொண்டு நிற்கச்செய்கிற தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்வதுதான்.
என்னுடைய தகப்பனாரை 1973-ம் ஆண்டு கர்த்தர் தொட்டார். கர்த்தர் அவரை கிருபையினால் தூக்கி எடுத்தார். நாற்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து தனக்கு ஊழியம் செய்யும்படி கர்த்தர் பெலப்படுத்தினார். ஞானத்தையும், விவேகத்தையும் தந்து நூற்றுக்கணக்கான ஆவிக்குரிய புத்தகங்களை எழுதும்படி உதவினார். அதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? கர்த்தருடைய கிருபைதான். அவருடைய கிருபையே அவரை நிலை நிறுத்தியது.
அநேகம்பேர் விழுந்துபோன விசுவாசிகளையும், ஊழியர்களையும் பார்த்து மனம் சோர்ந்துபோகிறார்கள். அவர்கள் விழுந்தாலும், எழுந்தாலும் கர்த்தருடையவர்கள். ஒரே இமைப்பொழுதில் கர்த்தர் அவர்களை எழுப்ப வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
விழுந்துபோனவர்களைக் குறித்து நீங்கள் எண்ணி சோர்வடையாமல், தேவ கிருபையால் நின்று நிறைவாக ஆத்தும ஆதாயம் செய்யும் கர்த்தருடைய பரிசுத்தவான்களைப் பின்பற்றுவீர்களாக. தேவபிள்ளைகளே, இதுவரை நிலைநிறுத்தின கர்த்தருடைய கிருபை அவருடைய வருகைப்பரியந்தம் உங்களைக் காத்துக்கொள்ள வல்லமையுள்ளதாக இருக்கிறது.
நினைவிற்கு:- “நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவ கிருபையே அப்படிச் செய்தது” (1 கொரி.15:10).