No products in the cart.
செப்டம்பர் 23 – செடிகளும், கொடிகளும்!
“நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்” (யோவான் 15:5).
கர்த்தர் திராட்சச் செடியானவர். நீங்கள் கொடிகள். தேவனுக்கும், உங்களுக்கும் இடையிலுள்ள உறவு எத்தனை இனிமையானதாகவும், இணைபிரியாததாகவும், இருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். செடியில் கொடி நிலைத்திராவிட்டால் அது வாடி வதங்கிப் போகுமே!
செடிக்கும், கொடிக்கும் உள்ள உறவு என்ன தெரியுமா? செடி எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்கும். கொடி எப்போதும் பெற்றுக்கொண்டே இருக்கும். செடியிலிருந்துதான் சாரம், இனிமை, ஊட்டசத்துக்கள், தண்ணீர் எல்லாம் கொடிக்குள் இறங்கி வருகின்றன. அதை பெற்றுக் கொள்ள கொடியானது, தன்னிலுள்ள ஆயிரக்கணக்கான நுண்துளைகளைச் செடிக்கு நேராய் எப்பொழுதும் திறந்து வைத்திருக்கிறது. அதன் மூலம் செடியின் உச்சிதங்கள் எல்லாம் கொடிக்குள் இறங்கி, கொடியைக் கனி கொடுக்கும்படி செய்கிறது.
நீங்களும் அதைப்போலவே உங்கள் உள்ளத்தின் நுண்துளைகளை பரலோகத்திற்கு நேராய் எப்பொழுதும் திறந்து வைத்திருப்பீர்களாக. உன்னத பெலன் உங்கள்மேல் இறங்கிக் கொண்டே இருக்க அது வழி செய்யும். அப்பொழுது ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு’ என்று உங்களால் சொல்ல முடியும். தேவனுடைய ஞானம் எப்போதும் உங்களுக்குள் இறங்கிக் கொண்டே இருக்கட்டும். அப்பொழுதுதான் தேவ ஞானத்தினால் தேவ இரகசியங்களை உங்களால் பேச முடியும். கிருபை உங்களுக்குள் எப்பொழுதுமே இறங்கிக் கொண்டே இருக்கட்டும். அப்பொழுதுதான் நீங்கள் கிருபையின் மேல் கிருபையடைவீர்கள். மகிமை உங்களுக்குள் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும். அப்பொழுது மகிமையின் மேல் மகிமையடைவீர்கள்.
இயேசு, “நானே திராட்சச்செடி நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால்” என்று சொல்லுகிறார். நீங்கள் அவரில் நிலைத்திருக்க வேண்டியது எவ்வளவு அவசியம்! நிலைத்திருக்கும்போதுதான் உங்களுக்கு மேன்மை, மகிமை எல்லாமே. அநேக ஊழியக்காரர்கள்கூட கர்த்தரில் நிலைத்திராத ஒரே காரணத்தினால் தங்கள் ஊழியத்தில் சறுக்கலை சந்திப்பதைக் காண்கிறோம்.
ஒரு இலை மரத்தில் நிலைத்திருக்கும்போது, அது பச்சைப்பசேல் என்று அழகாய்க் காட்சியளிக்கிறது. ஆனால் மரத்திலிருந்து அது பிடுங்கப்படும்போதோ கொஞ்ச நேரத்திலேயே வாடி வதங்கி காய்ந்து சருகாய்ப் போய்விடுகிறது. நீங்கள் கர்த்தரிடத்தில் நிலைத்திருக்க வேண்டியது எத்தனை அவசியம்!
கொடியானது செடியில் நிலைத்திருந்தால் அது கனிகொடுக்கிற இனிமையான சுபாவத்தைப் பெறுகிறது. அந்தக் கனி அநேக ஜீவன்களுக்கு பிரயோஜனமுள்ளதாய் அமைகிறது. தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்காகக் கனி கொடுக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களிடத்தில் கர்த்தர் கனியை எதிர்பார்க்கிறார். சுவையான கனியை நீங்கள் அதிகமான அளவில் கொடுக்கவேண்டும்.
நினைவிற்கு:- “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11).