No products in the cart.
செப்டம்பர் 22 – கிறிஸ்துவை வெளிப்படுத்துங்கள்!
“முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?” (மத். 7:16).
திராட்சச்செடிகளிலேயே திராட்சப்பழமும், அத்திமரங்களிலேயே அத்திப்பழமும் காணப்படும். ஒரு செடி என்ன செடியோ அந்தச் செடிக்கேற்ற கனிகள்தான் அதில் காணப்பட முடியும். இயேசு சொன்னார், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத். 7:16).
நீங்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, நல்ல திராட்சச் செடியாகிய அவரோடுகூட ஒட்டவைக்கபடுகிறீர்கள். பழையவைகள் ஒழிந்து போகின்றன. எல்லாம் புதிதாகின்றன. கிறிஸ்துவோடுகூட ஒட்டப்பட்டு, அவரோடுகூட இடைவிடாமல் உறவாடிக் கொண்டிருக்கிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவின் சுபாவத்தை மற்றவர்களுக்கு பிரதிபலிப்பவர்களாக இருப்பீர்கள். அப்பொழுது உங்களிலே ஆவிக்குரிய கனிகள் காணப்படும்.
இயேசு சொன்னார், “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத். 7:17-20). கனிகள் மரத்தை வெளிப்படுத்துகிறதுபோல நீங்களும் எப்போதும் கிறிஸ்துவினுடைய சாயலையும், குணாதிசயங்களையும் வெளிப்படுத்த வேண்டும்.
இயேசுகிறிஸ்து தன் வாழ்நாளெல்லாம் பிதாவை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். வேதம் சொல்லுகிறது “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்தார்” (எபி. 1:3). பிதாவுக்கேற்ற கனிகளைக் கொடுத்ததினால்தான் அவரால், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று தெளிவாய்க் கூற முடிந்தது (யோவான் 14:9).
ஒரு முறை, ஒரு தேவ ஊழியர் ஒரு வீட்டுக்கு சென்றபோது, அங்கே கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை நடந்துகொண்டிருந்தது. கணவனைக் குறித்து மனைவி போதகரிடத்திலே, கோபமாக, ‘ஐயா இவர் ஆலயத்திலே தேவதூதன் மாதிரி இருக்கிறார். வீட்டிலோ பிசாசு போல சண்டைப் போடுகிறார்’ என்றார். கணவன் “நானாவது ஆலயத்தில் தேவதூதனைப் போல இருக்கிறேன். இவள் ஆலயத்திலும் பிசாசுபோல இருக்கிறாள். வீட்டிலும் பிசாசு போல இருக்கிறாள். இவளுடன் வாழுவதைவிட நான் நரகத்தில் வாழ்வது மேல்” என்றார்.
வேதம் சொல்லுகிறது, “ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்று, தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது. உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்” (யாக். 3:11-13). தேவபிள்ளைகளே, உங்கள் எண்ணங்களும் செய்கைகளும் எப்பொழுதும் கிறிஸ்துவை வெளிப்படுத்துவதாகவே இருக்கட்டும்.
நினைவிற்கு:- “விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்” (சகரி. 8:12).